மவ்லவி K.K. பிஸ்மில்லாஹ் கான் ஃபைஜி
இஸ்லாத்திற்கும், இஸ்லாமியர்களுக்கும் சேவைசெய்யப் போகிறோம் என்ற பெயரிலே நாம் ஏற்படுத்திக் கொண்ட இயக்கங்களினால், இந்த இஸ்லாமிய சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் நன்மைகளையும், விளைந்திருக்கும் தீமைகளையும் சதவீதக் கணக்கெடுத்தால், நன்மையைவிட தீமையின் சதவீதமே மிகைத்திருப்பது நமக்கு தெரியவரும். அதுமட்டுமல்ல இனியும் இந்த இயக்கம் சார்ந்த சிந்தனை நம்மிடம் தொடருமானால் இத்தீமையின் சதவீதம் இன்னும் அதிகரித்து, அதிகரித்து இறுதியில் மரத்தால் அழியும் மரம்போல், இஸ்லாத்திற்கு நலன் செய்வதற்கென்று நாளுக்கொன்றாய் நாம் ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும் இயக்கங்களினாலே இந்த இஸ்லாமிய சமூகத்திற்கு பெரும் அழிவு ஏற்படும் அபாயம் காத்திருக்கின்றது என்பது மட்டும் திண்ணம். (அல்லாஹ் பாதுகாப்பானாக!)
அடிப்படையோ, ஆதாரமோ, முன்னுதாரணமோ இன்றி நாம் ஏற்படுத்திக் கொண்ட இந்த இயக்கங்களினால் சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் விபரீதங்களையும், தீமைகளையும் என்னால் முடிந்தளவிற்கு பட்டியலிடுகின்றேன். அவைகளை உணர்ந்து இனியாவது நம்மை திருத்திக் கொள்ள முனைவோமாக!.
ஒரு சமுதாயத்திற்கு ஏற்படும் நன்மைகளில் பெரும் நன்மை அச்சமுதாயத்தவர்கள் நற்பண்புடையவர்களாக மாறுவது, ஒரு சமுதாயத்திற்கு ஏற்படும் தீமைகளில் பெரும் தீமை அச்சமுதாயத்தவர்களின் குணநலன்கள் சீர்கெடுவதாகும். அதாவது, ஒரு சமுதாயத்வர்களிடம் உலக ரீதியான வசதிகள் போதுமானதாக இல்லாமலிருந்தும், நற்குணம் படைத்தவர்களாக இருப்பார்களேயானால், ஒவ்வொருவரும் தன்னிடம் இருப்பதை வைத்துப் போதுமாக்கிக் கொண்டு, ஒருவர் மற்றவருக்குத் துணையாக நிற்பார்கள் அதனால் அச்சமுதாயத்தில் நிம்மதி நிலவும், அவர்களுக்கு மத்தியல் சகோதரத்துவம் தலைத்தோங்கும், உதாரணம் நமது அருமை ஸஹாபாக்கள். அதே நேரத்தில் ஒரு சமுதாயத்திடம் உலக ரீதியான எல்லாவசதிகள் இருந்தும் அவர்களின் உள்ளம் சீர் கெட்டுக் கிடக்குமானால் அவர்களுக்கு மத்தியில் அன்றாடம் பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும், ஒவ்வொருவரும் தனது சுகத்தை மட்டுமே பெரிதென நினைத்து பிறருக்கு துன்பம் தருவதில் இன்பம் காணுவர், அதனால் அவர்களுக்கு மத்தியல் நிம்மதி தொலைந்து வாழ்க்கை ஒரு கேள்விக் குறியாகவே இருக்கும். எனவே, இந்த இயக்கங்களினால் நமது உள்ளங்கள் எந்தளவிற்கு பாழ்படுத்தப்பட்டுவிட்டன என்பதை முதலில் பட்டியலிடுகின்றேன். நான் யாருடைய உள்ளத்தையும் பிளந்து பார்க்கவில்லை மாறாக அன்றாடம் நமக்கு மத்தியல் நடக்கும் நிகழ்ச்சிகளும், நமது நடத்தைகளும் நமது உள்ளத்திலுள்ள எண்ணங்களுக்கு சாட்சி கூறிக்கொண்டிருக்கின்றன. இயக்கங்களினால் இச்சமுதாயத்திற்கு வெளிப்படையாக ஏற்பட்டிருக்கும், ஏற்பட்டுக்கொண்டிருக்கும் தீமைகளை நாளிதழ்களும், வாரயிதழ்களும், மாதந்திரப் பத்திரிக்கைகளும் உலகத்திற்கு படம்பிடித்துக் காட்டிக்கொண்டிருப்பதால் நான் அவைகளைப் பட்டியலிடத் தேவையில்லை.
1. அருமை ஸஹாபாக்கள் இஸ்லாத்தை வளர்க்க வேண்டும், அதன் போதனைகளை மக்களிடம் பரப்பவேண்டும் என்றுதான் அவர்களின் முழு நேர சிந்தனையும் இருந்தது. ஆனால்,இயக்கம் சார்ந்த சகோதரர்களின் சிந்தனை தான் சார்ந்த இயக்கத்தை எப்படி வளர்ப்பது?, அதன் கொள்கையை மக்கள் ஏற்றுக் கொள்ளவும், அதைப் புகழவும் என்ன செய்வது?என்ற சிந்தனைதான் மிகைத்து நிற்கின்றது. அதனால் தான் பார்க்கும் ஒவ்வொருவரும் தனது இயக்கத்தை சார்ந்தவர்களாக ஆகிவிடவேண்டும் என்பதற்காக அவரிடம் இஸ்லாத்தைப் போதிப்பதை விட்டுவிட்டு தனது இயக்கத்தின் பெருமைகளை மட்டுமே விவரித்து, பிற இயக்கங்களைப் பற்றி குறை கூறி, எப்படியாகிலும் அவரை தனது இயக்கவாதியாக மாற்றுவதற்கு இவர் எடுக்கும் முயற்சிகள் அளவிட முடியாதவை. இஸ்லாத்தைவிட தனது இயக்கத்தைப் பெரிதெனக் கருதும் எண்ணம் இன்று பரவலாக ஏற்பட்டிருப்பது இயக்க உணர்வினால் இச்சமுதாயத்திற்கு ஏற்பட்ட தீமையில்லையா?.
2. இயக்கங்களினால் இந்த சமூகத்திற்கு என்ன நன்மை ஏற்பட்டிருக்கின்றது? என்று இயக்கம் நடத்துபவர்களையும், இயக்கம் சார்ந்தவர்களையும் கேட்டால், ஒவ்வொரு இயக்கத்தவரும் தான் சார்ந்திருக்கும் இயக்கங்கள் செய்த நன்மைகளை மட்டுமே பட்டியல் போடுவார்கள், அடுத்த இயக்கத்தவர்கள் செய்த நன்மைகளை மறந்தும் கூறமாட்டார்கள். அவ்வாறு யாராவது பிற இயக்கங்கள் செய்த நன்மைகளைப் பெரிதாகப் பேசினால் அதை மட்டப்படுத்துவதற்காக, அந்நன்மையைப் பற்றி ஏதாகிலும் ஒரு குறை கூறாமல் இருக்கமாட்டார், காரணம் தான் சார்ந்திருக்கும் இயக்கத்தைவிட பிற இயக்கங்களை பிறர் பெரிதாக மதித்துவிடக் கூடாது என்ற இயக்கவெறி. இதில் 100-ல் ஒன்றிரண்டு பேர் விதிவிலக்காக இருக்கலாம், ஆனால் பெரும்பான்மையினருக்கு பிறர் செய்யும் நன்மையையும் இழிந்துரைக்கும் குணத்தை இந்த இயங்கள் ஏற்படுத்தி இருக்கின்றன. 100க்கு 98 பேர் இக்குணத்துடன் இருப்பது இயக்க உணர்வினால் இச்சமூகத்திற்கு விளைந்த தீமையில்லையா?
3. ஒருவரின் மீது பிரியம் கொள்வதும், அவரை வெறுப்பதும் அல்லாஹ்வுக்காக ஆகியிருக்க வேண்டும் என்பது தான் நபி(ஸல்)அவர்கள் நமக்கு இட்ட கட்டளை, ஆனால், இன்று ஒரு மனிதனை விரும்புவதும், வெறுப்பதும், மதிப்பதும், ஏளனமாக கருதுவதும் இயங்கங்களின் அடிப்படையில் ஆகிவிட்டதை நாம் கண்கூடாக கண்டு வருகின்றோம். நேற்றுவரை நமது சகோதரர்களென நாம் நினைத்தவர்கள், இன்று நமது விரோதிகளாக நமக்கு தோற்றமளிப்பது ஏன்? நேற்றுவரை கண்ணியமிக்கவர்களாக நமக்கு தோற்றமளித்தவர்கள் இன்று நமது பார்வையில் இழிந்தவர்களாக தோற்றமளிப்பது ஏன்?. அவர் வேறு இயக்கத்தைச் சார்ந்தவர் என்ற காரணத்தைத் தவிர வேறுறெதையும் நம்மால் உளமாரக் கூறமுடியுமா?.இப்படி கலிமா சொன்ன இரு முஸ்லிம்கள் விரோத மனப்பான்மை கொண்டவர்களாக மாறியிருப்பது இயக்க உணர்வினால் இச்சமூகத்திற்கு விளைந்த தீமையில்லையா?
4. பிறரின் குற்றங் குறைகளை தேடித்திரியாதீர்கள் (49:12) என்பது அல்லாஹ்வுடைய கட்டளை.ஆனால், தனது இயக்கத்தையும், தனது இயக்கம் சார்ந்தவர்களையும் பரிசுத்தவான்கள் என காட்டுவதற்காக, பிற இயக்கம் சார்ந்தவர்களின் குற்றம் குறைகளை தேடித்திரிவதும், ஏதாகிலும் ஒன்று கிடைத்துவிட்டால் அதை ஒன்றுக்குப் பத்தாக மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்தி திருப்தி காணும் இழிந்த நிலை இன்று நம்மில் உருவாகியிருப்பதை நம்மால் மறுக்க முடியுமா? இன்று ஒரு இயக்கத்தை சார்ந்தவர் குறைகூறினால் நாளை அடுத்த இயக்கத்தவர் இதைவிட மட்டமானவைகளை மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்தி திருப்தி காணும் நிலை இன்று இயக்கம் சார்ந்தவர்களிடம் உருவாகியிருப்பது சமுதாயத்திற்கு விளைந்த நன்மையா? அல்லது தீமையா? நீங்களே முடிவு செய்யுங்கள்.
5. கெட்டது அதிகமாக இருப்பது உம்மை ஆச்சிரியத்தில் ஆழ்த்திய போதிலும், கெட்டதும் நல்லதும் சமமாகாது, (5:100) என்பது அல்லாஹ்வின் கூற்று. ஒருவர் செய்த குற்றங்களை பகிரங்கமாக விமர்ச்சிப்பதற்கு இஸ்லாத்தில் பல தடைகள் இருந்தும். அதையும் மீறி ஒரு இயக்கத்தவர்களைப் பற்றி செய்யப்படும் தரங்கெட்ட விமர்ச்சனங்களையுங்கூட,அவ்வியக்கத்தவர்கள் அழகாகனதாக கருதி அதைக் கொண்டு திருப்தி காணும் நிலைக்கு நமது உள்ளங்கள் சீர்கெட்டிருப்பது இச்சமுதாயத்திற்கு ஏற்பட்டிருக்கும் நன்மையா?தீமையா? நீங்களே முடிவுசெய்யுங்கள்.
6. இரு இயக்கத்தவர்கள் சந்திக்கும் போது நன்றாகப் பேசிக்கொள்வதும், இருவரும் பிரிந்து சென்றபின், ஒருவர் மற்றவரைப் பற்றி எந்தளவிற்கு இகழ்ந்து பேசமுடியுமோ அந்தளவிற்கு இகழ்ந்து பேசுவதுமான நிலை, நமக்கு எதைக் காட்டுகின்றது. இருவரும் பேசிக்கொண்டது உதட்டளவில், சிரித்ததும் உதட்டளவில், பேசும்போதும், சிரிக்கும் போதும் உள்ளத்திலிருப்பதை மறைத்து, மனமாரப் பேசுவதாய் இருவரும் நடித்திருக்கின்றனர். இப்படி உள்ளுக்குப் புறம் மாற்றமாக நடக்கும் நிலையை நமக்கு ஏற்படுத்தியது எது?. நமக்குள் ஏற்பட்ட குடும்பப் பிரச்சனையா? அல்லது மார்க்கப் பிரச்சனையா? இல்லையே, நாம் தோற்றுவித்த இயக்கங்களும், நாமாகவே வகுத்துக்கொண்ட கொள்கை கோட்பாடுகளும்தான் காரணம். இந்த கொள்கை கோட்பாடுகளுக்காக ஒருவர் மற்றவரை விரோதிக்கின்றோம், ஒருவர் மற்றவரிடம் நடிக்கின்றோம், இப்படி நடந்து கொள்ள நாம் எங்கிருந்து ஆதாரத்தை எடுத்தோம், இப்படி நடந்துகொள்ள நமக்கு கற்றுக்கொடுத்தது யார்?. உள்ளுக்குப் புறமாக நடக்கும் பண்பு ஒரு முஸ்லிமின் பண்பாக இருக்க முடியுமா? அது நயவஞ்சகர்களின் பண்பு என்று நமக்கு நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தரவில்லையா? இப்பண்புடன் நடந்துகொள்ளக் கூடாது என்று அல்லாஹ் நம்மைக் கண்டிக்கவில்லையா? இதையெல்லாம் நாம் உணர்ந்திருந்தும் ஏன் அல்லாஹ், ரஸூலின் கட்டளைகளை ஒரு பொருட்டாக நினைக்காமல் நடக்கின்றோம். இந்தளவிற்கு நமது உள்ளத்தைக் கடினமாக மாற்றிவிட்டதற்கு இந்த இயக்கங்கள்தான்;முழுமுதல் காரணம் என்பதை நம்மால் உளமார மறுக்க முடியுமா?. இது இயக்கங்களினால் சமுதாயத்திற்கு கிடைத்த நன்மையா? தீமையா? நீங்களே முடிவுசெய்யுங்கள்.
7. ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை மூன்று நாட்களுக்கு மேல் வெறுப்பது ஹலாலில்லை, ஹராம் என்ற நபி(ஸல்)அவர்களின் கட்டளை நமக்கு பழங்கதையாக ஆகிவிட்டிருப்பது,இந்த இஸ்லாமிய சமூகத்திற்கு கிடைத்த ஆரோக்கியமா? கேட்டால் கொள்கைக்காப் பிரிந்திருக்கின்றோம் என்று கூறுகிறோம். நாம் உருவாக்கிய இயக்கங்கள் நம்மை எங்கே அழைத்துக் கொண்டு செல்கின்றன என்பதை இப்போதாவது நாம் உணரக் கூடாதா?.
அல்லாஹ் ஒருவன் என்பதில் நமக்குள் பிளவு இல்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர், நமது வாழ்கையின் வழிகாட்டி என்பதில் நமக்குள் பிளவு இல்லை, குர்ஆன் அல்லாஹ்வின் வேதம் என்பதில் நமக்குள் பிளவு இல்லை, கஃபா நமது கிப்லா என்பதில் நமக்குள் பிளவு இல்லை, ஆனால் முஸ்லிம்கள் வாழும் எந்நாட்டிற்குச் சென்றாலும் நாம் உருவாக்கிய இயக்கங்களினால் நாமே பிளவுபட்டுப்போய் நிற்கின்றோமே!. ஒன்றா இரண்டா ஒரு ஊருக்குள் பல இயக்கம், ஒரு நாட்டிற்குள் நூறு இயக்கம், முழு உலகிலும் பல ஆயிரக்கணக்கான இயக்கங்களென பிரிந்துபோய் நிற்கின்றோமே! இதுதான் இஸ்லாம் நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடமா? இதற்குத்தான் நபி(ஸல்)அவர்களும், அருமை ஸஹாபாக்களும் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்தார்களா?
எங்கே நமது ஒற்றுமை? எங்கே நமது சகிப்புத்தன்மை? எங்கே நமது சகோதரத்துவம்? நமக்குள் இருக்கவேண்டிய சகிப்புத்தன்மையையும், சகோதரத்துவத்தையும் குழிதோண்டிப் புதைக்கத்தூண்டும் இந்த இயக்க உணர்வு நமக்கு இனியும் தேவைதானா? எதையெதையோ பரிசீலிக்கின்றோம், நமது உள்ளத்தில் ஆழப்பதிந்துவிட்ட இயங்கங்கள் சார்ந்த உணர்வுகளை மறுபரிசீலனை செய்யக் கூடாதா?; எந்த சமுதாயத்திற்கு நலன் செய்யவேண்டும் என்று நாம் இந்த இயக்கங்களை ஆரம்பித்தோமோ, அச்சமுதாயம் இயக்கங்களினாலேயே பிளவுண்டுகொண்டே செல்கிறது என்பதை உணர்வதற்கு ஏன் நமது உள்ளம் இடம் கொடுக்க மறுக்கின்றது?. எந்த ஒரு செயலை செய்தாலும் அது குர்ஆனில் உள்ளதா?ஹதீஸ்களில் உள்ளதா? என்று ஆராய்ந்து பார்க்கிறோம் நமது உள்ளத்தில் ஆழப்பதிந்துவிட்ட இயங்கங்கள் சார்ந்த உணர்வுகளை மறுபரிசீலனை செய்யக் கூடாதா?
இயக்கங்கள் பிளவை ஏற்படுத்தவில்லை, அதனுடைய நோக்கம் அதுவல்ல என்று என்னிடம் கூறநினைக்கும் சகோதரர்களிடம் நான் ஒரு கேள்விகேட்க விருப்பப்படுகின்றேன். காலமெல்லாம் கல்வியை போதித்துக் கொண்டிருந்த ஸஹாபாக்களில் எத்தனையோ பேர், நேரமும், தேவையும் வரும்போது காலமெல்லாம் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஸஹாபாக்களுடன் களமிறங்கி போர் செய்திருக்கின்றார்கள், அப்போது காலமெல்லாம் போரில் ஈடுபட்டவர்கள், இவர்கள் ஏன் இப்போது நம்முடன் வந்து இணைந்துக் கொண்டார்கள்?என்று மனதால் வெறுப்படையவுமில்லை, அல்லது அவர்களை உதாசீனம் செய்து தங்களுடன் இணையவிடாமல் தடுத்துவிடவுமில்லை. அதைப்போன்றுதான், தேவை ஏற்பட்டதும் நம்மிடம் பயின்றவர்கள் இருக்கின்றார்கள், நமது அபிமானிகள் இருக்கின்றார்கள், எனவே, அவர்களை திரட்டிக்கொண்டு நாம் தனியாக எதிரிகளுடன் போராடுவோம் என்று, கல்வியைப் போதித்த ஸஹாபாக்கள் நினைத்தார்களா? இல்லையே, எல்லோரும் ஒரே அணியாக திரண்டுதான் சமுதாயத்திற்காகப் போராடினார்கள். ஆனால், சமுதாயத்திற்காகப் பாடுபடப்போகின்றோம் என்ற பெயரில் நாம் தோற்றுவித்திருக்கும் இயங்களினால், சமுதாய நலனைக் கருதி ஏதாகிலும் ஒன்றிலாவது இதுவரை அனைத்து இயக்கங்களும் ஒத்த கருத்துடன் இணைந்து செயல்பட்டதாக வரலாறு இருக்கின்றதா?.
உதாரணத்திற்குக் கூறுகின்றேன், நமது பாபரி மசூதி இடிக்கப்பட்டதும், குஜராத்தில் நமது சகோதர சகோதரரிகள் கொடுமைக்குள்ளாக்கப்பட்டதும் இச்சமுதாயத்திற்கு ஏற்பட்ட பெரும் துன்பங்கள், இவ்விரு செயல்களையும் கண்டிக்காத நாடுகளே கிடையாது, அத்தகைய துன்பங்களை துடைப்பதற்கேனும் சமுதாயப் பணிகளுக்கென நாம் ஆரம்பித்திருக்கும் இந்த இயக்கங்கள் இதுவரை ஒரு முறையேனும் ஒன்றிணைந்திருக்கின்றதா?. ஒன்றிணைய வேண்டும் என்ற எதிர்கால எண்ணங்களாவது இருக்கின்றதா?. எங்களுக்கு முழு இந்தியாவிலும் ஒரு தலைமையிருக்கின்றது அதன் கூற்றுப்படிதான் செயல்படுவோம் என்று ஒரு இயக்கம் செல்கிறது, அவர்களது கொள்கையும் கோட்பாடும் சரியில்லை அவர்களோடு நாங்கள் இணைந்து செயல்படமாட்டோம் என்று ஒரு இயக்கம் செல்கிறது, அவர்கள் தூரநோக்கில்லாதவர்கள் அவர்களுடன் தூரநோக்குள்ள நாங்கள் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்று ஒரு இயக்கம் செல்கிறது, எங்கள் வேலை மார்க்கத்தைப் போதிப்பதுதான் சமுதாயத்திற்கு உதவிசெய்வது எங்கள் வேலை இல்லை என்று ஒரு இயக்கம் செல்கிறது. இறுதியல் ஒவ்வொன்றும் தனது பலத்தை தனித்தனியாக காட்டுவதால் எது நடக்க வேண்டும் என இந்த இயக்கங்களை நாம் ஆரம்பித்தோமோ அந்த நல்லநோக்கம் இதுவரை நிறைவடையாமல், முழுமைபெறாமல் இருக்கின்றது. இதுதான் இயங்கங்களின் நிலை இதை நம்மால் மறுக்க முடியுமா?.
பல துறைகளில் இஸ்லாத்திற்காக உழைத்துக் கொண்டிருந்த ஸஹாபாக்களால் எந்த நேரத்திலும் எதற்காகவும் ஒன்றுசேர முடிந்தது. ஆனால் இன்று எக் காரணத்திற்காகவும் நம்மால் ஓர் அணியில் ஒன்றுசேர முடியவில்லையே, காரணம் ஏன் என்று உணரமுடிகிறதா?. அன்று அருமை ஸஹாபாக்களுக்கு மத்தியில் இஸ்லாம் என்ற பந்தத்தைத் தவிர வேறு எந்த பந்தங்களும் இல்லை, ஒவ்வொருவரும் தனக்காக ஒரு கொள்கை கோட்பாடுகளை வகுத்துக் கொண்டு வாழவில்லை, அதனால் எல்லோரும் இஸ்லாம், முஸ்லிம் என்ற அணியில் ஒன்றாக இணைய முடிந்தது? ஆனால் இன்று நமக்கு மத்தியில் இஸ்லாம் என்ற பந்தத்தை தாண்டி இயக்கம் என்ற பிரிவு இருப்பதாலும், ஒவ்வொருவரும் தனித்தனியாக கொள்கை என்றும் கோட்பாடு என்றும், நிலைபாடு என்றும் நாமே வகுத்துக் கொண்டவைகள் இருப்பதாலும், சமுதாய நன்மைக்காக கூட நாம் ஒன்றிணைவதைவிட்டும் இவைகள் நம்மை தடுத்துக்கொண்டிருக்கின்றன என்பதுதான் நிதர்சனம்.
இதுமட்டுமல்ல, இந்த இயக்கங்கள் நம்மை பிளவுபடுத்தக் கூடியவைகள்தான், இயக்கங்கள் இருக்கும் வரை சமுதாய ஒற்றுமை என்பதை நாம் கற்பனை செய்தும் பார்க்க முடியாது என்பதற்கு இதோ மற்றுமொரு சான்று.
ஒருவர் எந்த இயக்கத்தையும் சாராதிருக்கும் வரைக்கும், அவர் எல்லா இயக்கத்தவர்களின் சபைக்கும் அனுமதிக்கப்படுகிறார். ஆனால் ஏதாகிலும் இயக்கத்தைச் சார்ந்தவராகிவிட்டால் பின் அவருக்கு வேறு இயக்கங்களின் சபைகளில் அனுமதி மறுக்கப்படுகின்றது. அது மட்டுமல்ல அவர் சார்ந்திருக்கும் இயக்கமும் அவர் பிற இயங்களில் சாராமல் இருக்க வேண்டும் என அவரை வலியுறுத்துகின்றது. தங்களது இயக்கத்திலுள்ளவர்கள் பிற எந்த இயக்கத்திலும் சாராமல் இருக்க வேண்டும் என இயக்க விதிகளையும் வகுத்துவைத்திருக்கின்றது.
இயக்கங்கள் மக்களுக்கு மத்தியில் பிரிவையும் பிளவையும்தான் உண்டாக்குகின்றன என்பதற்கு நமது கண்முன்னாலுள்ள இவ்விரு உண்மைகளைத் தவிர வேறு என்ன ஆதராம் வேண்டும்
சமூக ஒற்றுமையை, நல்லிணக்கத்தை குழைக்கும் இயக்க உணர்வை உள்ளத்தில் வைத்துக்கொண்டு, சமுதாய ஒற்றுமை, சமுதாய ஒற்றுமை என நாம் மேடைதோறும் முழங்கிவரும் வார்த்தைகள் வெறும் சொல் அலங்காரம்தான், அவ்வார்த்தைகள் உயிரோட்டமற்றவைகள், உள்ளத்திலிருந்து அல்லாமல், மக்களைக் கவர்வதற்காக வெறும் உதட்டிலிருந்து உதிரும் பசப்பு வார்த்தைகள்தான் என்பதை நமது நடவடிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. சமுதாய ஒற்றுமை என்று கூறிக்கொண்டே சகோதரனை குறைசொல்கின்றோம், தரம்கெட்ட வார்த்தைகளால் விமர்சனம் புரிகின்றோம், நான்கு சுவர்களுக்குள் அவர் செய்த தவறுகளை மேடைபோட்டு நாடறியச் செய்கின்றோம், இஸ்லாத்தை துவம்சம் செய்ய நினைக்கும் ஒரு எதிரியிடம் காட்டவேண்டிய வெறுப்பையும், கோபத்தையும்விட அதிகமாக தனது இயக்கத்தைச் சாராத சகோதரனிடம் காட்டுகின்றோம், இவைகள்தான் சமுதாய ஒற்றுமைக்கு வழிவகுக்கும் அடித்தளங்களா, அல்லது அழிவுபள்ளங்களா? சிந்தனை வாசலை நடுநிலையில் வைத்து சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
இறைவிசுவாசிகளே! நீங்கள் செய்யாததை ஏன் கூறுகின்றீர்கள்? அல்லாஹ்விடத்தில் மிகவும் கெட்டது நீங்கள் செய்யாதவற்றை கூறுவதாகும்(61:2-3)என்று கூறுகின்றானே இது நமக்கு கூறப்பட்ட உபதேசமில்லையா? ஏன் இதை உணர்ந்தும் உதாசீனம் செய்கின்றோம்.
இயக்கங்கள் என்று எப்போது தோன்றிவிடுகின்றதோ, அப்போதே பிளவுகளும் உடன்பிறந்துவிடுகின்றன. ஏனென்றால் தனது இயக்கத்தை வளர்ப்பதற்காக பிற இயக்கத்தைப் பற்றி குறைகூறும் நிலைக்கு நாம் ஆளாக்கப்படுகின்றோம். நாம் விரும்பியோ, விரும்பாமலோ இரு பிரிவுகள் உருவாகிவிடுகின்றன. அது காலபோக்கில் இரண்டு நான்காக, நான்கு பத்தாக பல்கிப்பெருகி இறுதியில் சமுதாயம் பலநூறு கூறுகளாக சிதறிக்கிடக்கும் இன்றைய நிலைக்கு ஆளாகிவிடும். எனவே, நமக்கு இஸ்லாம், முஸ்லிம் என்ற ஒரு பெயரைத்தவிர வெறு பெயர்கள் வேண்டாம். நாம் செய்யும் நல்அமல்களை சரியாகவும், நிறைவாகவும் செய்வோம், தேவைப்பட்டால் கூட்டாகச் செய்வோம், ஆனால், நமது கூட்டத்திற்கென்று தனிப்பெயர் வேண்டாம், இஸ்லாம் நமக்கு வழங்கியிருக்கும் கொள்கை கோட்பாடுகளைத் தவிர்த்து, நமது சமுதாயத்தைத் துண்டாடக் கூடிய வேறு எந்த கொள்கை கோட்பாடுகளும் நமக்கு வேண்டாம். நமக்குள் மீண்டும் சகிப்புத்தன்மையும், சகோதரத்துவமும் துளிர்விட தடையாக நிற்கும் இந்த இயக்க உணர்வுகளை குழிதோண்டிப் புதைப்போம். எதிர்வரும் சந்ததியினராவது இந்த இயக்க உணர்வென்னும் துர்வாடையை நுகராமலிருக்க வழிசெய்வோம். இதுதான் இன்று நாம் சமுதாயத்திற்குச் செய்யும் மாபெரும் நற்பணியாகும்.
தங்களை மாற்றிக்கொள்ள தயாரா?
நமது நாட்டு அரசியல்சாசனச் சட்டங்கள் இஸ்லாமிய பணிசெய்வதற்கும் இயக்கம் ஏற்படுத்த நம்மை நிர்பந்தித்தால். அச்சட்டங்களுக்காக இயக்கம் என்பது பெயரளவில் இருக்கட்டும்,அது நம்மை பிளவுபடுத்தும் பெயர்களாக ஆகிவிடவேண்டாம், இயக்கங்களின் பலத்தைக்காண்பிக்க உறுப்பினர்களின் எண்ணிக்கையை காட்டவேண்டும் என அரசாங்கம் நம்மை நிர்பந்தித்தால், உறுப்பினர்களின் பட்டியலை உருவாக்குவோம், ஆனால், உறுப்பினர்களின் பட்டியல் நமது ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் பட்டியலாக ஆகிவிடக்கூடாது.
இந்த மனநிலையுடன், நாமும், நம்முடன் இணைந்து இஸ்லாத்திற்கு சேவைசெய்ய நினைக்கும் சகோதரர்களும் எப்போதும் செயல்பட முடியும் என்றிருந்தால், இயக்கவுணர்வு இயக்கவெறியாக உருவெடுத்து, தனது சகோதரனையே எதிரியாக காணும் நிலை உருவாகி ஒருவர் மற்றவரைத்தாக்கும் இழிநிலை ஏற்படாமல் நமக்குள் புரிந்துணர்வுடன் நடந்துகொள்ளமுடியும் என்ற உறுதி அனைவருக்கும் இருந்தால், நாம் செய்யும் செயல் சிறந்தது என எண்ணுவதைப்போன்றே பிறர் செய்யும் நற்செயல்களையும் மனமகிழ்வோடு ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் பெற்றவர்களாக நம்மால் எப்போதும் இருக்கமுடியும் என்ற உறுதியிருந்தால், அரசாங்க சட்டத்திற்குட்பட்டு இயக்கங்கள் பெயரளவில் இருப்பதில் தவறில்லை.இயக்க உணர்வை தியாக உணர்வென மதிப்பவர்கள், தங்களின் மனப்பக்குவத்தை இவ்வாறு மாற்றிக்கொள்ள தயாரா?.
முடியும் என்று வாயளவில் வாக்கு கொடுக்கமுடியும், ஆனால் நம்மால் செயல்பட முடியாது என்பதுதான் உண்மை. ஏனெனில், இயக்கங்களின் கோட்பாடுகள் என நாம் உருவாக்கிவைத்திருப்பவைகள் இந்த ஒற்றுமை உணர்வுக்கு ஊறு விளைவிப்பவைகளாகவே இருக்கின்றன. நாம் ஏற்படுத்திய கோட்பாடுகளை மறுபரிசீலனை செய்து அதில் மாற்றம் ஏற்படுத்தாதவரை, மேற்சொன்ன மனப்பக்குவத்திற்கு இயக்கங்கள் இடங்கொடுக்காது.எனவேதான் மேற்சொன்ன மனநிலை எல்லா இயக்கத்தவர்களிடமிருந்தும் விடைபெற்று கண்காணா இடத்திற்குச் சென்றுவிட்டது, இதனால் இயக்க உணர்வென்பதே இந்நூற்றாண்டில் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கும் ஒன்றாகும் என்பதில் ஐயமில்லை.
உண்மையிலேயே சமுதாயத்திற்கு நலவுசெய்யவேண்டும் என நினைப்பவர்கள், தங்களின் இயக்கஉணர்வை, இல்லை இல்லை இயக்க வெறியை குழிதோண்டிப் புதைக்க முன்வரவேண்டும்.
இயக்கத்தின் மீது கொண்டுள்ள கண்மூடித்தனமான பற்றினை தூக்கியெறிந்துவிட்டு நடுநிலை கண்ணோட்டத்துடன் செயல்பட உறுதிஎடுக்கவேண்டும்.
எந்த இயக்கத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களும் என்னுடைய சகோதரார்களே என்ற எண்ணம் எப்போதும் நம்மில் குடிகொண்டிருக்க வேண்டும்.அவர்கள் புரியும் நற்சேவைகளையும் மனதார ஏற்றுக்கொண்டு அவர்களைப் பற்றியும் மக்களிடம் நல்ல அபிப்பிராயங்கள் ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்யமுன்வரவேண்டும். இயக்கங்கள் என்பதே இணையாத துருவங்கள் என்ற நிலையை மாற்றி, இயக்கம் என்பதெல்லாம் பெயரளவில்தான், நாம் அனைவரும் இஸ்லாமியர்கள் என்ற உணர்வோடு ஓர் அணியில் நாம் ஒன்றிணைய வேண்டும்.
நன்மையான கருத்தை, சமுதாயத்திற்கு பலன்தரும், மார்க்கத்திற்கு முரணில்லாத ஆலோசனையை எந்த இயக்கத்தவர்கள் கூறினாலும் அதை அனைவரும் ஒன்றிணைந்து ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும், ஒருவருக்கொருவர் உறுதுணையாய் நின்று அதை செயல்படுத்தும் நிலையும் உருவாகவேண்டும்.இதுவே, சமுதாயத்திற்கு ஆரோக்கியத்தைத் தரும்,இன்னும் நாம் என்ன நோக்கத்திற்காக இயக்கங்கள் ஆரம்பித்தோமோ அவற்றின் நோக்கமும் வெற்றியடையும்.
விழிப்படைவோம்!
தங்களின் சுய இலாபத்திற்காக சமுதாயத்தைத் துண்டாட நினைப்பவர்களை, நன்மை என்ற பெயரில் நம்மில் இயக்க வெறியைத் தூண்டி அதில் குளிர்காய நினைப்பவர்களை, நாம் இனம்கண்டு விலகிக் கொள்ளவேண்டும். ஆனால், இவர்களை இனம் காண்பது அவ்வளவு எளிதல்ல, ஏனெனில், உதட்டில் தேனும், உள்ளத்தில் நஞ்சும் கொண்டவர்கள். காலம் பார்த்து தங்களின் காரியத்தை சாதித்துக்கொள்வார்கள். எனவே, சமுதாயத்திற்கு நலன் செய்யவேண்டும் என்ற பெயரில் நம்மில் இயக்க வெறியை தூண்ட முற்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இடம் கொடுக்காது அவர்களை உதாசீனம் செய்வோம். அவர்களை இனம் கண்டுகொண்டால், சமுதாயத்திற்கு முன்னால் அவர்களின் முகத்திரையை கிழித்து இனியும் அவர்களின் இரட்டை வேடத்தால் நமது சகோதரர்கள் ஏமாறுவதைவிட்டும் தடுப்போம். ஏனெனில், இவர்களைப் போன்றவர்களால்தான் சமுதாயத்தில் பிளவுகள் உண்டாகின்றன.
இயக்கவெறி என்பது இனவெறியைப் போன்றதுதான், இதை ஒழிப்பதற்குத்தான் நமது தலைவர் நபி(ஸல்)அவர்கள் பாடுபட்டார்கள். இனத்தால், குலத்தால், மொழியால், பணத்தால் மனிதர்கள் தங்களை பாகுபடுத்திக்கொள்ளக் கூடாது என்ற சமத்துவக் கொள்கைக்காக நபி(ஸல்) அவர்கள் செய்த சமர்கள் எத்தனை, அவர்கள் ஏற்ற இடற்கள் எத்தனை,அவற்றையெல்லாம் சற்றும் உணராமல், இயக்கத்தின்பெயரால் நமக்குள் பாகுபாடுகளை ஏற்படுத்திக் கொள்வதும், பகைமையை வளர்த்துக்கொள்வதும் ஈமானின் அடையாளமாகுமா?இவற்றை எண்ணிப்பார்த்து, இயக்கவெறியும் அல்லாஹ் ரஸூலால் தடுக்கப்பட்ட ஒன்று என்பதை நாம் உணர்ந்துகொள்ளவோம்.
நாம் நமக்கு உருவாக்கிக்கொண்ட பெயர்கள் அனைத்தையும்விட, அல்லாஹ் நமக்கு இட்டிருக்கும் பெயரே சிறந்ததாகும். அப்பெயர்களைக் கொண்டே நாம் நம்மை இனம்காட்டிக் கொள்வோம், அதுவே நமக்கு கண்ணியத்தைத் தரும்.
(விசுவாசங்கொண்டோரே!) இன்னும் நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் செய்ய வேண்டிய முறைப்படி அறப்போர் செய்யுங்கள். அவனே உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறான். இந்த மார்க்கத்தில் அவன் உங்களுக்கு யாதொரு சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை, உங்களுடைய தந்தை இப்ராஹீமுடைய மார்க்கத்தை(கடைபிடியுங்கள்) அவன்தான் (இதற்கு) முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப்பெயரிட்டான். (22:78 அல்ஹஜ்)
முஸ்லிம்கள் என்ற பெயரைத்தவிர வேறுபெர்களைக் கொண்டு அழைப்பதையும், அதைக்கொண்டு ஒருவருக்கொருவர் தங்களை வித்தியாசப்படுத்திக் கொள்வதையும் நபி(ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளார்கள்.
ஒரு போரின்போது ஒருவர் முஹாஜிரீன்களே!(முன்னோருங்கள்)என்று கூறினார், மற்றவர் அன்சாரிகளே(முன்னேருங்கள்) என்று கூறினார். இதைக்கேட்ட நபி(ஸல்)அவர்கள் நான் உங்களுக்கு மத்திpயில் (உயிருடன்)இருக்கும்போதே அறியாமைகால அழைப்பைக்கொண்டு அழைத்துக்கொள்ள (உங்களுக்கு) என்ன நேர்ந்தது? என்று கோபத்துடன் கேட்டார்கள்.
முஹாஜிரீன்கள், அன்ஸாரிகள் என்பது ஸஹாபாக்களுக்கு அல்லாஹ் கொடுத்த சிறப்பு பெயர்கள், அப்பெயர்களைக்கொண்டுகூட தங்களை பிரிவினைப் படுத்திக்கொள்ளக்கூடாது என்று நபி(ஸல்)அவர்கள் தடுத்திருக்கும் போது, நான் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவன், நான் இந்த இயக்கத்தைச் சேர்ந்தவன் என்று நம்மை பிரிவினை படுத்திக்கொள்ளலாமா?.
மற்றோர் இடத்தில் இன்னும் தெளிவாகச் சொன்னார்கள்.
எனக்கு அல்லாஹ் ஏவியிருக்கும் ஐந்து காரியங்களைக்கொண்டு நான் உங்களை ஏவுகின்றேன். கூட்டமைப்பு, (அமீரின்சொல்லைக்) கேட்குதல், (அமீருக்கு) வழிப்படுதல், (இஸ்லாமிய முறைப்படி வாழமுடியாத இடத்திலிருந்து) ஹிஜ்ரத் செய்தல், அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் செய்தல். யார் கூட்டத்தைவிட்டு ஒரு ஜான் அளவிற்குப் பிரிகின்றாரோ, அவர் தனது தலையிலிருந்து இஸ்லாமிய வளையத்தை கழற்றிவிட்டவராவார், அவர் மீண்டும் கூட்டத்தோடு சேர்ந்தாலே தவிர, எவர் அறியாமைகால அழைப்பைக் கொண்டு (மக்களை) அழைக்கின்றாரோ, அவர் நரகத்தில் தனிப்பிக்கப்;பட்டவராவார். உடனே ஒரு தோழர் அவர் தொழுது, நோன்பு வைத்திருந்தாலுமா? என்று கேட்டதற்கு, ஆம் அவர் தொழுது, நோன்பு வைத்திருந்தாலும் சரியே! (அவர் நரகிற்குரியவர்தான்) எனவே, அல்லாஹ்வின் அழைப்பைக் கொண்டு (ஒருவர் மற்றவரை)அழையுங்கள், அவன் உங்களுக்கு முஸ்லிம்கள் என்றும்,முஃமின்கள் என்றும், அல்லாஹ்வின் அடியார்கள் என்றும் பெயர்வைத்தவனாவான். என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (திர்மிதி-2864, அஹ்மத் 130, 202)
பிரிவினைகளை ஒழித்து, மனிதர்களிடத்தில் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டிய இஸ்லாமியர்களிடத்திலேயே, இயக்கங்கள் என்ற பெயரால் பிரிவினைகள் ஏற்பட்டிருப்பது இந்த சமுதாயத்திற்கு ஏற்பட்ட துர்பாக்கியமாகும்.எனவே, இயக்கத்தை வைத்து நமக்குள் பிரிவினையை ஏற்படுத்த முனைபவர்களை, இயக்கவெறியைத் தூண்டி சகோதரர்களுக்குள் சமர்களை ஏற்படுத்த முனைபவர்களை, தங்களின் சுயலாபத்திற்காக சமுதாயத்தை துண்டாட நினைப்பவர்களை சிறிதும் தயக்கமின்றி தூக்கியெறிவோம்!. நாம் அனைவர்களும் ஓர் அணியில் திரண்டு இத்தகைய பிரிவினைவாதிகளுக்கு சரியானதோர் பாடம் புகட்டுவோம்! உலக அரங்கில் இஸ்லாமியர்களின் சகோதரத்துவ பிணைப்பின் வலிமையை பறைசாற்றுவோம்!, எதிர்வரும் சந்ததிகளாவது இதுபோன்ற பிரிவினைகளில் சிக்கித்தவிக்காமல் இருக்க சரியானதோர் பாதையை அமைத்துக் கொடுப்போம்!,வருங்காலங்களிலாவது இயக்கம் என்ற மாயையை துறந்தவர்களாக சகோதரத்துவ பிணைப்புடன் வாழ நம்மை இப்போதே தயார் செய்வோம்!.
யா அல்லாஹ்! உள்ளங்கள் உனது கையில், எங்களது உள்ளத்தை இயக்கவெறியினைவிட்டும் பரிசுத்தப்படுத்தி, முழு உலக முஸ்லிம்களுக்கு மத்தியல் சகோதரத்துவம் தழைத்தோங்கச் செய்வாயாக!.
இது சமுதாய ஒற்றுமைக்கு இயக்கம் சார்ந்தவர்களை அழைக்கும் ஒரு அறைகூவலாகும், தயைகூர்ந்து, ஒவ்வொரு சகோதரர்களும் தங்களின் உள்ளத்திலுள்ள ஒருசார்பு நிலையினை சற்றே இறக்கிவைத்துவிட்டு, நடுநிலை கண்ணோட்டத்துடன் இப்பிரசுரத்தை ஒன்றுக்கு இருமுறை நிதானத்துடன் படித்து, சமுதாயத்திற்கு நலனை விளைவிக்கும் இயக்கம்சாரா நிலைக்கு தங்களின் மனநிலையை மாற்றிக்கொள்ள முன்வரவேண்டும் என்பதே எனது அவா, இதுவே, இப்பிரசுரத்தின் முக்கிய நோக்கமுமாகும். அன்றாடம் நாம் செய்தித்தாள்களில் படிக்கும் செய்திகளும், நமக்குள் பரிமாறிக்கொள்ளப்படும் துண்டுப்பிரசுரங்களும், நமக்குள் சகோதரத்துவம் எந்தளவிற்கு சீர்கெட்டுப்போயுள்ளது என்பதை படம்பிடித்துக் காட்டுகின்றது. ஒருவர் மற்றவரை விமர்சித்துக்கொள்வதற்கே நமது நேரங்கள் விரயமாக்கப்பட்டுவரும் நிலை நமது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது என்பதை நாம் உணர ஆழ்ந்த ஆராய்ச்சி தேவையில்லை. உலகளாவிய முறையில் இஸ்லாமியர்களுக்கு எதிரிகளால் துன்பங்கள் ஏற்பட்டுக்கொண்டிருப்பது போதாதா? நமக்குள்ளேயே பலநூறு பிரிவுகளாகப் பிரிந்து ஒருவர் மற்றவருக்கு சொல்லாலும், செயலாலும் துன்பம் விளைவிக்கும் துர்நிலைக்கு நம்மை ஆட்படுத்திக்கொள்வது சரிதானா? இந்நிலை மாறி சமுதாயத்தில் சுமூக நிலை ஏற்பட,மார்க்க அறிஞர்களும், சமுதாயப் பற்றுள்ளவர்களும் முன்வரவேண்டும், என்று சகோதரத்துவப் பற்றுடன் அழைக்கின்றேன். இறுதியாக இந்த சமுதாயத்திற்கு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ள ஆயிரக்கணக்கான நபிமொழியிலிருந்து ஒன்றை மட்டும் நினைவுபடுத்தி முடிக்கின்றேன்.
ஒருவருக்கொருவர் கோபமும், விரோதமும் கொள்ளாதீர்கள். பொறாமைப் படாதீர்கள், புறக்கணிக்காதீர்கள், உறவைத் துண்டித்துக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! நீங்கள் சகோதரர்களாக ஆகிவிடுங்கள். (புகாரி, முஸ்லிம்)
என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
மவ்லவி K.K. பிஸ்மில்லாஹ் கான் ஃபைஜி
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பிற்கினிய ஏகத்துவ சகோதர சகோதரிகளே!
ஏகத்துவவாதிகள் என்று நம்மை நாமே மார்தட்டிக்கொள்கிறோம். எந்த ஒரு செயலை செய்தாலும் அது குர்ஆனில் உள்ளதா? ஹதீஸ்களில் உள்ளதா? என்று ஆராய்ந்து பார்க்கிறோம். அதன் பயனாக இன்று நாம் தூய்மையான மார்க்கதில் இருக்கிறோம் (அல்ஹம்துலில்லாஹ்) ஆனால் நேற்று நம் நிலை என்ன?சற்று சிந்தித்துப் பாருங்களேன்!
கடந்த காலங்களில் நம் நிலை
· தர்காஹ்வே கதி, கப்ருகளை வணங்கியிருந்தோம்,
· கத்தம் பாத்திஹா ஓதியிருந்தோம்,
· மவ்லூது எனும் ஷிர்க்கில் மூழ்கியிருந்தோம்,
· உருஸ், மேலதாளங்கள், கத்னா விழா, புனித நீராட்டு விழா கொண்டாடி பணத்தை வீண் விரயம் செய்தோம்.
· சினிமா, ஆடல் பாடல் கஜல் கச்சேரி கூத்தாட்டங்கள் என்று கேவலமான ஒரு வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்தோம்.
· பல இலட்சம் செலவு செய்து திருமணம் செய்து வரதட்சனை, சீர்வரிசை வாங்கியிருந்தோம்
இப்படிப்பட்ட குருடர்களாகவும் பாவிகளாகவும் இருந்த நம் மீது அல்லாஹ் சுப்ஹானவதாலா கருணைகாட்டினான். நமக்கு ஏகத்துவத்தை விளக்கிக்காட்டினான்! நன்மை தீமைகளை பிறித்தறிவிக்கும் அருள்மறை குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை பின்பற்றும் ஏகத்துவவாதிகளாக மாற்றினான். இன்றைக்கு நாம் சத்தியம் எது அசத்தியம் எது என்பதை தெளிவாக அறிந்து வைத்துள்ளோம் இப்போது நம்மிடம் இணைவைப்பு எனும் கொடுமை கிடையாது! ஆனால் இன்று ஏகத்துவவாதிகளாகிய நாம் ஏகத்துவம் என்ற அழகான கொள்கையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பின்னோக்கி சென்றுக் கொண்டிருக்கிறோம்! இந்த நிலையை தவிர்க்கவே இந்த அறிவுரைகள்!
உதாரணமாக சேலம் மாநகரில் ஒரு ஏகத்துவ அமைப்பின் சகோதரர்கள் சேலம் பகுதியில் மலிந்து கிடக்கும் ஷிர்க், பித்அத்தை விளக்கிக்கூறி அவர்களை நேர்வழிக்கு அழைப்பு விடுக்க எண்ணி மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டு அதற்காக விளம்பர நோட்டிஸ்களை அச்சிட்டு சுவர்களில் ஒட்டினால் அதே பகுதியில் உள்ள மற்றொரு முஸ்லிம் அமைப்பு அந்த மார்க்க விளக்க பொதுக்கூட சுவர்விளம்பரங்கள் மீது தங்கள் சுவர் விளம்பரங்களை ஒட்டி தாவா பணி பற்றிய தகவல்கள் மக்களுக்கு உரிய முறையில் சென்று சேராத வண்ணம் தடுக்கின்றனர். இவ்வாறு செய்யலாமா? இதைவிட அந்த விளம்பரங்களுக்கு அருகாமையில் விளம்பரம் ஒட்டலாமே! மக்கள் எந்த கூட்டத்திற்கு செல்ல நினைக் கின்றார்களோ அங்கு செல்லலாமே ஏன் இப்படிப்பட்ட அநாகரீக செயல்களை செய்கிறார்கள்!
அன்புச் சகோதரர்களே இப்படிப்பட்ட கேவலமான செயலை செய்த அந்த நபர்களையோ, அவர்களின் அமைப்பையோ பற்றி இங்கு சுட்டிக்காட்டலாம் ஆனால் அவ்வாறு செய்வதால் அவர்கள் அசிங்கப்பட்டு நிற்பார்கள் மேலும் குற்றம் செய்தவன் திருந்த ஒரு வாய்ப்பு கொடுக்க எண்ணியே பெயரை குறிப்பிடாமல் நிறுத்தியுள்ளேன்! குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பார்கள் இதன் அடிப்படையில் குற்றம் செய்த அந்த நெஞ்சங்கள் குறுகுறுக்கட்டும் என்று எண்ணி மறைமுகமாக எச்சரிக்கிறேன்! இனிமேலும் இப்படிப்பட்ட பாவச் செயல்களை செய்யாதீர்கள்! அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும்!
சகோதரர்களே! நம்மை யாரும் பார்க்கவில்லை பாவமான காரியத்தை செய்தால் யாருக்கும் தெரியாது என்று எண்ணிக் கொள்ளாதீர்கள் மாறாக அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை நினைவில் நிறுத்துங்கள்! கேவலமான இந்த இழிச் செயல்களை செய்து மஹ்சர் பெருவெளியில் அல்லாஹ்விடம் சிறுமைபட்டு உங்கள் கண்ணியத்தை இழந்துவிடாதீர்கள் என்று உங்களை மீண்டும் மீண்டும் எச்சரிக்கிறேன்!
ஒவ்வொருவரின் வலது புறத்திலும், இடது புறத்திலும் அமர்ந்து (செயல்களை) எழுதும் இரு வானவர்கள் மனிதனிடம் இல்லாமல் எந்தச் சொல்லையும் அவன் மொழிவதில்லை. (காஃப்:-50 : 17, 18)
இந்த அருள்மறை வசனத்தை அறியாதவர் அறிந்துக்கொள்ளட்டும் இனிமேலாவது தாவாவை முறிக்கும் பாவத்திலிருந்து மீண்டு வாருங்கள் ஏகத்துவத்தை எத்திவைக்கும் அழகான பணிகளுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்! தாவா பணியை அல்லாஹ் வகுத்துள்ளான் அவன் ஆணைப்படி ஒவ்வொரு ஜமாஅத்தும் அந்த பணியை செய்துக்கொண்டுள்ளது எனவே இப்படிப்பட் அருமையான பணிகளை தடுக்காதீர்கள் மீறி தடுத்தால் அது தாவா பணியை தடுத்த குற்றம் மட்டுமல்லாமல் அல்லாஹ்வின் கட்டளையை எதிர்த்த குற்றம் உங்கள் மீது ஏற்பட்டுவிடும் என்று மீண்டும் மீண்டும் எச்சரிக்கிறேன்! இதோ இந்த பாக்கியம் உங்களுக்கு வேண்டாமா? நபிகளார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில்அழகிய குணமுள்ளவர்கள் எனக்கு மிக நேசமானவர்களிலும், மறுமைநாளில் எனக்கு மிக நெருக்கமாக அமர்ந்திருப்பவர்களிலும் அடங்குவர். உங்களில் எனக்கு மிக வெறுப்பானவர்களும், மறுமைநாளில் என்னை விட்டும் தூரத்திலிருப்பவர்களும் உங்களில் அதிகமாக பேசுபவர்களும் தங்களின் பேச்சால் மக்களிடம் பெருமையடிப்பவர்களும், வாய்பிளந்திருப்பவர்களும் ஆவார்கள். அல்லாஹ்வின் தூதரே! வாய் பிளந்தோர் என்றால் யார்? என்று நபித்தோழர்கள் கேட்ட போது பெருமையடிப்பவர்கள் என நபிகளார் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அஹ்மத், திர்மிதி, இப்னுஹிப்பான், தப்ரானி) பாவங்களிலிருந்து ஈடேற்றம் பெற அழகிய வழி அல்லாஹ்வின் தூதரே! ஈடேற்றம் பெறுவது எவ்வாறு என்று கேட்டேன். அதற்கு நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உன் நாவை தீங்கை விட்டும் தடுத்துக்கொள்! உன் வீடு விஸ்தீரணமாக இருக்கட்டும். உன் பிழைகளுக்காக அழுவீராக! எனக்கூறினார்கள். (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரழி) ஆதாரம்: திர்மிதி)
எச்சரிக்கையாக இருப்பீர்!
மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும் அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்! (பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40)
கப்ரு வேதனைக்கும், மஹ்சர் வெயிலுக்கும், நரக நெருப்புக்கும் பயந்துக்கொள்ளுங்கள் சம்பந்தப்பட்ட சகோதரர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டு திருந்துங்கள்! அல்லாஹ் நேர்வழிகாட்டுவானாக!
|
No comments:
Post a Comment