May 26, 2011

நாமும் பரிகாசமும்

எம். டீ. எம். ஹிஷாம் (ஸலபி, மதனி)

இது மனிதர்களுக்கிடையில் தொடர்பாடல் பரவிக்காணப்படும் ஒரு காலப்பகுதியாகும். சமுகத்திலுள்ள பலதரப்பட்டவர்களுக்கிடையில் தொடர்பாடல் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. மற்றும், இத்தொடர்பாடலானது நேரடியாகவும், தொலைத்தொடர்பு சாதனங்களின் ஊடாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மனிதர்கள் ஒன்று கூடக்கூடிய இடங்களின் பெருக்கமும், நவீன தொலைத் தொடர்பு சாதனங்களின் அபார வளர்ச்சியுமே இதற்குக் காரணம் என்று சொன்னால் மிகையாகாது.

இத்தகைய தொடர்பாடலினால் மனிதனிடத்தில் காணப்படும் நாவன்மை பன்மடங்கு விரிவடைந்துள்ளது. நல்ல பேச்சுக்கள், தீய பேச்சுக்கள் என்ற பேதம் இல்லாமல் நாவுகள் உலாவருகின்றன. அதன் ஒரு பிரதிபலிப்பே முறையற்ற பரிகாசமாகும். இம்முறையற்ற பரிகாசமானது, சமுகத்தில் பல தீய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையில், இஸ்லாம் பரிகாசத்தை அங்கீகரிக்காத மார்க்கமல்ல. நபியவர்கள் கூட பல சந்தர்ப்பங்களில் பரிகாசம் செய்துள்ளார்கள். அவர்களின் பரிகாசமானது மார்க்க வரையறைக்குள் இருந்ததினால் எவ்வித தீய விளைவுகளையும் அவை ஏற்படுத்தவில்லை. அத்தகைய பரிகாசங்களில் சிலவற்றை நோக்குவோம்.

Ø அபூ உமைர் என்ற சிறுவன் நுகைர் என்ற பெயரையுடைய ஒரு பறவையை வளர்த்து வந்தான். அப்பறவை திடீர்ரென இறந்துவிட்டது. அதனால் அச்சிறுவன் கடுமையாக கவளைப்பட்டான். அவனைக் கண்ணுற்ற நபியவர்கள் பரிகாசமாக, அறபு இலக்கிய நடையில் 'அபூ உமைரே நுகைருக்கு என்ன நடந்தது?' என வினவினார்கள். (புகாரி)

Ø ஒரு நபித்தோழர் பயணம் செய்வதற்கு ஓர் ஒட்டகத்தை தனக்கு கொடுக்குமாறு நபியவர்களிடத்தில் வினவிய போது, நபியவர்கள்: 'உன்னை ஓர் ஒட்டகக்குட்டியின் மீது ஏற்றி அனுப்புகின்றோம்' என்றார்கள். அதற்கு அத்தோழர், 'ஒட்டகக்குட்டியில் எவ்வாறு பயணிக்க முடியும்?' எனக்கேற்க, நபியவர்கள்: 'அவ்வொட்டகமும் இன்னொரு தாய் ஒட்டகத்தின் குட்டியல்லவா? எனப் பரிகாசமாக வினவினார்கள். (அபூதாவுத்)

Ø நபியவர்கள் ஒரு முறை அனஸ் (ரழி) அவர்களை அழைக்கும் போது, 'இரு காதுகளை உடையவனே!' என அழைத்தார்கள். (திர்மிதி)

Ø ஒரு மூதாட்டி நபியவர்களிடத்தில் வந்து நான் சுவனம் பிரவேசிக்க அல்லாஹ்விடம் பிராத்தியுங்கள்? எனக்கேட்க, நிச்சயமாக மூதாட்டிகள் சுவனம் நூழையமாட்டீர்கள்! என பதிலளித்தார்கள். அப்போது அம்மூதாட்டி அழுத நிலையில் அவ்விடத்தைவிட்டும் வெளியேறும் போது, நபியவர்கள் சபையோரை நோக்கி 'அவர் மூதாட்டியாக இருக்கும் நிலையில் சுவனம் நுழையமாட்டார், குமரியாக மாற்றம் செய்யப்பட்ட பின்பே அதனுள் நுழைவார்' என அவருக்குக் கூறுங்கள் எனப் பணித்தார்கள். (திர்மிதி)

இவ்வரலாற்றுத் துணுக்குகள் அனுமதிக்கப்பட்ட பரிகாசத்தை வரவேற்கக்கூடியனவாக அமைந்திருப்பதை அவதானித்திருப்பீர்கள். வரவேற்கத்தக்க பரிகாசம் தொடர்பாக இப்னு தைமியா (ரஹ்) கூறும்போது: 'எவர் சத்தியத்திற்காக அழகான மற்றும் ஆகுமாக்கப்பட்டதை உதவியாக எடுத்துக் கொள்கின்றாரோ அவர் அவ்வாறு எடுப்பதாகிறது, நல்லமல்களில் ஒன்றாகக் கருதப்படும்' என்கிறார். மேலும், சில சட்டவல்லுனர்கள் ஆகுமாக்கப்பட்ட பரிகாசத்தை மனிதாபிமான நடவடிக்கைகளில் ஒன்றாகவும் நட்புக்கு இலக்கணமாகவும் கருதியுள்ளனர்.

எனவே, நாம் புரியக்கூடிய பரிகாசம் அனுமதிக்கத்தக்க பரிகாசமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு சில நெறிமுறைகளை அல்குர்ஆன் அஸ்ஸூன்னாஹ் அடிப்படையில் அறிஞர்கள் வகுத்துத் தந்துள்ளனர். அந்நெறிமுறைகள் சரிவரப்பேணப்படுமிடத்து நிச்சயமாக எவருக்கும் பாதிப்பற்ற இன்பகரமான ஒரு சூழல் ஏற்படும். அவையாவன:

Ø மார்க்கத்தை பரிகாசிக்கக்கூடிய அம்சங்கள் கலந்திருக்கக்கூடாது

நாம் புரியக்கூடிய பரிகாசமானது, மார்க்கத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய அம்சங்களை நையாண்டி செய்யக்கூடிய விதத்தில் அமையும் போது, அது கண்டிப்பாக தவிர்ந்து கொள்ளப்படவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றது. அவ்வாறு ஒருவர் மார்க்கத்தை பரிகாசிப்பது அவரை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிவிடும் ஆபத்தாகவும் அமைந்துள்ளது.

அல்லாஹூத்தஆலா கூறுகின்றான்: ' (இது பற்றி) அவர்களிடம் நீர் கேட்டால், 'நாங்கள் (வீண்) பேச்சில் மூழ்கியும், விளையாடிக் கொண்டுமிருந்தோம்' என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். அல்லாஹ்வையும், அவனது வசனங்களையும், அவனது தூதரையுமா நீங்கள் பரிகாசித்துக் கொண்டிருந்தீர்;கள்? என்று (நபியே!) நீர் கேட்பீராக! போலிக்காரணம் கூறாதீர்கள். நீங்கள் நம்பிக்கை கொண்ட பின்னர் நிச்சயாமக நிராகரித்து விட்டீர்கள். (அத்தவ்பா: 65,66)

இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ்வையும் அவனது வசனங்களையும் அவனது தூதரையும் பரிகாசிப்பது இறை நிராகரிப்பாகும்.'

அதேபோன்று மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட அம்சங்களையும் பரிகாசிப்பதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். ஒருவர் வைத்திருக்கக்கூடிய தாடியையோ, பெண்கள் அணியக்கூடிய ஹிஜாபையோ, கரண்டைக்குக் மேலால் அணியப்படக்கூடிய ஆடையையோ பரிகாசிப்பதும் இவ்வாகையைச் சாரும்.

இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 'அல்லாஹ்வின் ருபூபிய்யத் கோட்பாடு மற்றும் தூதுத்துவம், வஹீ, மார்க்கம் போன்றன சங்கைப்படுத்தப்பட வேண்டிய பகுதிகளாகும். எந்த ஒருவரும் இத்தகைய பகுதிகளை பரிகாசத்தத்திற்காக மற்றும் நையாண்டிக்காக இலக்காக்குவது குற்றமாகும். அவ்வாறு இலக்காக்குபவன் இறை நிராகரிப்பாளனாக கருதப்படுவான். ஏனெனில், அவனது செயலானது அல்லாஹ்வையும் அவனது தூதர்கள், வேதங்கள், சட்டதிட்டங்கள் ஆகியவற்றையும் இழிவுபடுத்தியதற்குச் சமனாகும்.'

Ø பொய் கலந்ததாக இருக்கக்கூடாது.

இது குறித்து நபியவர்கள் கூறும்போது: ' தனது கூட்டத்தார் சிரிப்பதற்காக பேச்சில் பொய்யுரைப்பவனுக்கு கேடு உண்டாகட்டும்.' என்றார்கள் (அபூதாவுத்)

Ø திடுக்கிடச் செய்யக்கூடியதாக இருக்கக்கூடாது.

ஒரு முறை நபித்தோழர்களில் சிலர் நபியவர்களுடன் பிரயாணித்துக் கொண்டிருக்கையில், அவர்களில் ஒருவர் தூக்கம் மிகுதியால் ஒரு கயிற்றைப் பிடித்துக் கொண்டு தூங்கிவிட்டார். அதனைக் கண்ணுற்ற சிலர் மெதுவாக வந்து அவர் பிடித்திருந்த கயிற்றை அசைத்தனர்;. அதனால் அத்தோழர் திடுக்கிட்டெழுந்தார். அதைப் பார்த்த நபியவர்கள் 'ஒரு முஸ்லிமுக்கு இன்னொரு முஸ்லிமை திடுக்கிடச் செய்வது ஆகுமானதல்ல' எனக் கூறினார்கள்.' (அபூதாவுத்)

Ø பரிகாசத்தின் போது சாடைகளின் மூலம் ஒருவரை இழிவுபடுத்தக் கூடாது

இது தொடர்பாக அல்லாஹூத்தஆலா பிரஸ்தாபிக்கும் போது: ' நம்பிக்கை கொண்டோரே! ஒரு கூட்டத்தினர், மற்றொரு கூட்டத்தினரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கக்கூடும். எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்.) இவர்களை விட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கக்கூடும். உங்களுக்கிடையே நீங்கள் குறைகூற வேண்டாம். மேலும், பட்டப்பெயர்களால் அழைக்கவும் வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் தீய பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்.' (அல்ஹூஜ்ராத்: 11)

இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் இவ்வசனம் குறித்துக் கூறுகையில்: ' இவ்வசனத்தின் மூலம் மக்களை அற்பமாகக் கருதுவதும், அவர்களை சிறுமைப்படுத்துவதும், அவர்களை நையாண்டி செய்வதும் நாடப்படுகின்றது. இவ்வாறு நடந்து கொள்வது ஹராமாகும். மேலும், இவை நயவஞ்சகர்களின் பண்புகளில் உள்ளனவாகவும் கருதப்படும்' என்கிறார்.

மேலும், நபியவர்கள் கூறும் போது: 'உங்கள் சகோதரனின் இன்னல்கள் குறித்து உங்களது சந்தோசத்தை வெளிக்காட்ட வேண்டாம். அல்லாஹ் அவருக்கு இரக்கம் காட்டி உங்களை சோதித்துவிடுவான்' என்றார்கள். (திர்மிதி)

Ø பரிகாசமானது எல்லை மீறியதாக இருக்கக்கூடாது.

நாம் புரியும் பரிகாசமானது அளவுக்கதிகமானதாக இருக்கக்கூடாது. அவ்வாறு அளவுக்கதிகமாக பரிகாசம் செய்வது முஃமீன்களின் பண்புகளுக்கு மாற்றமானதாகும்.

பொதுவாக, பரிகாசமானது அன்றாட வாழ்வில் உட்சாகம், ஆரோக்கியம் போன்றவற்றைத் தருகின்றது. அதனைக் கருத்தில் கொண்டே இஸ்லாம் அது விடயத்தில் சலுகையளித்துள்ளது. அச்சலுகையை நாம் அளவுகடந்து பயன்படுத்தும் போது அது விபரீதமாக மாறிவிடும்.

உமர் இப்னு அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ' பரிகாசத்தைப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அது விரோதத்தை ஏற்படுத்தக்கூடிய ஒர் அறிவீனமான செயலாகும்.'

இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 'இஸ்லாம் தடை செய்த பரிகாசமானது, அதில் எல்லை மீறுதலும், தொடர்ந்தேர்ச்சியான ஈடுபாடும் இருக்கும். நிச்சயமாக அது சிரிப்பையும், கல் நெஞ்சத்தையும் உண்டாக்கும். இன்னும், அல்லாஹ்வை ஞாபகப்படுத்துவதைவிட்டும் மனதைத் திசைதிருப்பிவிடும். அதிகமான நேரத்தை பிறரை தும்புருத்துவதில் கழித்துவிடும். அதன் மூலம் வைராக்கியம் உண்டாகும். ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற சுய கௌரவத்தைப் போக்கிவிடும். இப்படியான விடயங்களை விட்டும் ஈடேற்றம் பெற்ற பரிகாசங்களே நபியவர்கள் மேற்கொண்ட அனுமதிக்கப்பட்ட பரிகாசம்களாகத் திகழுகின்றன.'

Ø மனிதர்களின் அந்தஸ்தைப் புரிந்து கொண்டு அவர்களைப் பரிகாசிக்க வேண்டும்.

சமுகத்தில் பல படித்தரங்களையுடைய மக்கள் உள்ளனர். அவரவரது அந்தஸ்தைப் புரிந்து கொண்டு காரியம் ஆற்றுவது எமது கடமையாகும். அந்தவிதத்தில் பரிகாசத்தினது நிலைப்பாடும் அவ்வாறே. சமுகத்தில் உலமாக்கள், வயோதிபர்கள், பெற்றோர்கள், கல்விமான்கள் உள்ளிட்டோருக்கு ஒரு வகையான அந்தஸ்தும் அறிவீணர்கள், பைத்தியக்காரர்கள், சிறுவர்கள் உள்ளிட்டோருக்கு வேறு வகையான அந்தஸ்தும் இருக்கின்றது. அவற்றைப் புரிந்து கொண்டு எம் பரிகாசங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஸஃத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ' உன்னுடைய பரிகாசத்தைச் சுருக்கிக் கொள்! நிச்சயமாக அதில் எல்லை மீறிச் செல்வது ஒருவருக்கு இருக்கின்ற கண்ணியத்தைப் போக்கிவிடும். மேலும், உன்னை அறிவிலியாக ஆக்கிவிடும்;.'

உமர் இப்னு அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 'பரிகாசத்தைப் பயந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அது ஒருவருக்கு இருக்கும் மனிதாபிமானத்தைப் போக்கிவிடும்.'

Ø அதிகமாக சிரிக்கவோ, சிரிக்க வைக்கவோ கூடாது.

அதிகமான சிரிப்பது தொடர்பாக எச்சரித்து நபியவர்கள் பல இடங்களில் கூறியுள்ளார்கள். ஓரிடத்தில் கூறும் போது: ' அதிகமாக சிரிக்காதீர்கள், நிச்சயமாக அதிகமாக சிரிப்பது உள்ளத்தை மரணிக்கச் செய்து விடும்.' என்றார்கள். (ஸஹீஹூல் ஜாமிஉ)

உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: 'எவருடைய சிரிப்பு அதிகமாக இருக்கிறதோ அவருடைய கண்ணியம் குறைந்து விடும்.'

இன்று மனிதர்கள் சிரிப்பு விடயத்தில் எல்லை மீறிச் சென்றுள்ளனர். முழுமையாக சிரிப்பை நேசிக்கக்கூடியவர்களாக மாறிவிட்டனர். நகைச்சுவையுடன் கலந்த வாழ்க்கையை சிறப்பாகக் கருதுகின்றனர். இத்தகையவர்கள் பின்வரும் நபிமொழியை சிந்திக்க வேண்டும்.

'நான் அறிந்து வைத்திருப்பவற்றை நீங்கள் அறிவீர்;களென்றால் குறைவாக சிரிப்பீர்கள் கூடுதலாக அழுவீர்கள்.' (புகாரி, திர்மிதி, அஹ்மத்)

Ø புறம் கலக்கக்கூடாது

புறம் என்றால் என்ன? அதன் விபரீதங்கள் யாவை? என்பன குறித்த பல தகவல்களை நீங்கள் இதற்கு முன் அறிந்திருப்பீர்கள்;. அவற்றைக் கருத்தில் கொண்டு நாம் புரியும் பரிகாசங்களில் புறத்தைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

Ø பரிகாசம் செய்வதற்குப் பொருத்தமான நேரத்தைத் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.

இது விடயத்தில் எம்மில் பலர் பொடுபோக்காக நடந்து கொண்டதின் காரணத்தினால் சமுகத்தில் ஏற்பட்ட விளைவுகள் எண்ணிலடங்காது. அதனால் இவ்விடயத்தையும் கருத்தில் கொண்டு காரியமாற்றுவோம்.



பரிகாசம் விடயத்தில் எம் முன்னோர்களின் நிலைப்பாடு

பரிகாசம் விடயத்தில் எம் முன்னோர்கள் எவ்வாறு நடந்து கொண்டுள்ளார்கள் என்பது குறித்த பல தகவல்கள் வரலாற்று நெடுகிலும் பதிவாகியுள்ளன. அவற்றில் இருந்து சில துணுக்குகளை உங்கள் கண்முன் சமர்ப்பிக்கின்றேன்.

எ ஒரு மனிதன் ஸூப்யான் இப்னு உயைனா (ரஹ்) அவர்களிடத்தில் வந்து, 'பரிகாசமானது நிராகரிக்கத்தக்கதாகும்' எனக்கூறினான். அதற்கு இமாமவர்கள், 'மாற்றமாக, அதனை சிறந்த முறையில் கையாளத்தெரிந்தவர்களுக்கு அது ஸூன்னாவாகும்' என பதிலளித்தார்கள்.

எ பிலால் இப்னு ஸஃத் (ரஹ்) அவர்கள் பரிகாசம் விடயத்தில் ஸகாபாக்களின் நிலைப்பாடு பற்றிக் கூறும் போது: 'உலக ஆசைகள் விடயத்தில் கடினப்போக்குடையவர்களாகவும், தங்களுக்கு மத்தியில் புன்முறுவல் பூக்கக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். இராப்பொழுதை அடைந்தால் வணக்கவழிபாட்டில் தீவிரம் காட்டக்கூடியவர்களாக மாறிவிடுவார்கள்.'

எ நபித்தோழர்கள் சிரிக்கக்கூடியவர்களாக இருந்தார்களா? என்று இப்னு உமர் (ரழி) அவர்களிடத்தில் வினவப்பட்டபோது, 'ஆம்' என பதிலளித்துவிட்டு, 'அவர்களது உள்ளங்களில் ஈமான் மலைகளைப் போலிருந்தது' எனக்கூறினார்கள்.



நாம் மேலே குறிப்பிட்ட தகவல்களில் இருந்து பரிகாசம் பற்றிய சில முக்கிய விளக்கங்களைப் பெற்றுக் கொண்டிருப்பீர்கள். அவற்றைக் கருத்தில் கொண்டு நாம் புரியும் பரிகாசங்களை அமைத்துக் கொள்வோமாக!

No comments: