Aug 14, 2013

போக்கிரிப் பயலின் பேச்சுக்காக பதாகையை விட்டுக் கொடுக்கலாமா?



கடந்த 11-08-2013 அன்று குருநாகல் நகரத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் பொது பல சேனா அமைப்பு வழமை போன்று முஸ்லிம்களை வம்புக்கிழுத்தது. இக்கூட்டத்தில் பறகஹதெனிய முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு அருகில் அமையப் பெற்றிருக்கும் 'அமைதி பள்ளிவாயல் முன்னால்' எனும் பதாகைகளை அகற்ற வேண்டும் என்பது முக்கிய கருப்பொருளாக இருந்தது. அடுத்த நாள் 12 மணிக்கு முன்னர் குறித்த பதாகைகளை அகற்றிவிடுவோம் என கீழ்த்தரமான வார்த்தைகளில் கொக்கரித்தனர்.

அடுத்த நாள் மவத்தகம பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட ஒரு குழு பறகஹதெனிய பிரதேசத்திற்குள் நுழைந்து பலாத்காரமாக குறித்த பதாதைகளை அகற்ற முனைந்தனர். இருந்த போதிலும் ஊர் மக்களின் போராட்டத்தால் இம்முயற்சி வெற்றி அளிக்கவில்லை. மறு நாள் விடியற் காலை 3 மணியளவில் ஒரு விசமி இப்பதாகையை சேதப்படுத்த முனைந்தும் அதுவும் பிரதேச இளைஞர்களால் முறியடிக்கப்பட்டது.. குறித்த நபர் பொலிஸ் உத்தியோகத்தர் என்று அங்கு கூடியிருந்த இளைஞர்கள் குறிப்பிட்டனர்.

இப்பதாகையின் வரலாறு

1918 ஆண்டு பெரும்பான்மை மக்களின் பெரஹரா பறகஹதெனிய பிரதான வீதியூடாக சென்ற நேரத்தில் பள்ளிவாசலுக்கு முன்னால் அமைதியாக போக வேண்டும் என பிரதேச முஸ்லிம்கள் சிங்கள மக்களிடம் வேண்டிக் கொண்டனர். அதனை மறுத்த சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் கைகலப்பு ஏற்படவே விடயம் அப்போதைய ஆங்கிலேய பிரதிநிதிகளின் கவணத்திற்கு கொண்டு வரப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கும் முகமாக பல பிரயத்தனங்களுக்கு மத்தியில் 1932ம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு 1934 இல் முஸ்லிம்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். அன்று இருந்த எமது மூதாதையரின் பாரிய முயற்சியினால் 1934 தொடக்கம் குறித்த பாதாகை போடப்பட்டது. அண்மையில் பாதை அபிவிருத்தி இடம் பெற்ற போது குறித்த பதாகை சேதமாக்கப்பட்டமையினால் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் (RDA)  அதற்குரிய நஷ்ட ஈட்டுத் தொகை
20633.28 ரூபாய் (BOC Battaramulla Branch, Check No 690386) பறகஹதெனிய பெரிய பள்ளிவாசளினால் பெற்றுக் கொள்ளப்பட்டது.




அதன் பின்னர் RDA யினால் குறித்த பதாகையை புதுப் பொலிவுடன் இரு பள்ளிவாசல்களுக்கு முன்னாலும் நடப்பட்டது.

இதனை விட்டுக் கொடுக்கலாமா?

நாட்டில் ஏற்பட்டுள்ள பௌத்த பேரினவாதச் சூழலில் முஸ்லிம் சமூகம் இலக்கு வைக்கப்பட்டு திட்டமிட்ட அடிப்படையில் பல்வேறு வகையிலும் இம்சிக்கப்படும் சம்பவங்கள் நாளாந்தம் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றது. குறிப்பாக முஸ்லிம்களின் மத உரிமைகளில் கைவைக்கும் காவிப் பயங்கரவாதம் அரசாங்கத்தின் உயர் பீடங்களின் பூரண அனுசரனையில் நடைபெறுகின்றமை நாடறிந்த விடயமாகும்.

இவ்வசாதாரன சூழ்நிலையில் இப்பதாகையை விட்டுக் கொடுப்பதென்பது எமது அடிப்படை மத உரிமையை விட்டுக் கொடுப்பது போன்றதாகும். எனவே எக்காரணம் கொண்டும் காவிப் பயங்கரவாதத்திற்கு நாம் பலிக்கடாவாகிவிடக் கூடாது. சட்ட ரீதியாக நீதிமன்ற உத்தரவுடன் மேற்படி பதாதையை அகற்றியாக வேண்டும் என்ற நிலை வந்தால் முஸ்லிம்களாகிய நாம் சட்டத்தை மதித்து அதற்கு கட்டுப்பட தயாராக உள்ளோம் என்பதனையும் பொது பல சேனா போன்ற காடைத்தனம் பேசக்கூடியவர்களுக்கு அடிபணிந்து எமது உரிமைகளை தாரைவார்ப்பதை விட எமது மார்க்கத்திற்காக நாம் பிறந்த மண்ணிலே வீர மரணம் அடைவதை வணக்கமாக நினைக்கும் மக்கள் கூட்டம் என்பதை இந்த நாட்டிலே மீண்டும் ஒரு யுத்த சூழலை உருவாக்க எத்தனிக்கும் காவிப் பயங்கரவாதிகள் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ் சமூகத்தின் உரிமைகளைப் பறித்து அவர்களின் வாழ்வுரிமையை அவமதித்த காரணத்தினால் இந்த நாடு கொலைக்களமாக்கப்பட்டு அதன் வடுக்கள் இன்னும் முழுமையாக ஆறாத நிலையில் முஸ்லிம் சமூகத்தை சீண்டிப் பார்க்கும் காவிப்பயங்கரவாதம் இதனால் ஏற்படும் விளைவுகளைப் பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வுலகம் தான் எமது நிலையான வாழ்வு என்று எல்லளவும் எண்ணிப்பார்க்காத ஒரு சமூகமாகிய முஸ்லிம்களை சீண்டிப்பார்ப்பதன் விளைவு பாரதூரமானது என்பதனை இந்நாட்டின் நடுநிலை சிந்தனைவாதிகள், புத்தி ஜீவிகள் உணர்ந்துள்ளனர். எனவே இவ்விடயத்தில் நடப்பு அரசாங்கம் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். சிங்கள மக்களின் வாக்கு வங்கியை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நாட்டை மீண்டும் குட்டிச் சுவராக்கிவிடக்கூடாது. படைத்தவனை மாத்திரம் அஞ்சும்  சமூக்கத்திற்கு சக படைப்பினங்கள் ஒன்றும் பெரிய விடயமல்ல என்பதைனை நன்றாக புரிந்து செயற்பட வேண்டும்.



தொகுப்பு: எம். றிஸ்கான் முஸ்தீன் (மதனி)
14-08-2013
 

No comments: