Jan 17, 2014

உணவில் விஸ்தீரணம் ஏற்படுவதற்கான காரணங்கள் – 01


post_essay


بسم الله الرحمن الرحيم

- அபூஹுனைப் முஹம்மத் ஹிஷாம் இப்னு முஹம்மத் தௌபீக்
நிச்சயமாக அல்லாஹுத்தஆலா மனித வாழ்வை உணவில் வைத்துள்ளான். பூமியானது எல்லாவகையான மக்களுக்கும் பிரயோசனம் அளிக்கக்கூடியதாக உள்ளது. அத்தகைய மக்கள் தொழில்களில் எதனையும் பெறாதவர்காளகவோ அல்லது தொழில்களில் ஏதாவது ஒன்றைப் பெற்று தமது வருமானத்தைக் கொண்டு திருப்தியடையக்கூடியவர்களாகவோ அல்லது திருப்தியடையாதவர்களாகவோ இருக்கலாம்.
உண்மையில் மனித வாழ்க்கையானது செல்வத்தை அடிப்படையாகக் கொண்டே காணப்படுகின்றது. இத்தகைய செல்வமானது சரிவர நிர்வகிக்கப்படும் காலமெல்லாம் வாழ்வியல் அம்சங்கள் அனைத்தும் சீராகக் காணப்படும். இத்தத்துவத்தை பின்வரும் திருக்குர்ஆன் வசனம் பிரஸ்தாபிக்கின்றது.
அநாதைகளின் பொருளுக்குக் காரியஸ்தராக ஏற்பட்ட நீங்கள் அவர்களின் வாழ்க்கைக்கே ஆதாரமாக அல்லாஹ் அமைத்திருக்கும் உங்களிடமிருக்கும் அவர்களுடைய பொருட்களை புத்திக் குறைவானவர்களாக அவர்கள் இருந்தால் அவர்களிடம் கொடுத்துவிட வேண்டாம்.
 - அந்நிஸா: 5
எனவே, மனிதவாழ்வில் முக்கிய இடத்தைவகிக்கும் செல்வத்தில் விஸ்தீரணத்தை நாடக்கூடிய சகோதரர்களுக்கு பின்வரும் காரணங்களை காணிக்கையாக்குகின்றேன்.
1.    பாவமீட்சி மற்றும் பாவமன்னிப்புத் தேடல்
அதிகதிகமாக பாவமீட்சி மற்றும் பாவமன்னிப்புத் தேடுவது உணவில் விஸ்தீரணம் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகின்றது. இது தொடர்பாக அல்லாஹுத்தஆலா கூறும்போது:
ஆகவே, முந்திய உங்கள் பாவங்களுக்காக உங்கள் இரட்சகனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனாக இருக்கிறான் என்றும் கூறினேன். அவ்வாறு செய்வீர்களாயின் தடைப்பட்டிருக்கும் மழையை உங்களுக்குத் தெடர்ச்சியாக அனுப்புவான். செல்வங்களையும் ஆண்மக்களையும் கொடுப்பது கொண்டு உங்களுக்கு உதவி புரிவான். உங்களுக்காகத் தோட்டங்களையும் ஆக்குவான். உங்களுக்காக ஆறுகளையும் அவற்றில் ஆக்குவான் என்கிறான்.
    நூஹ்: 10 – 12  -
இன்று அதிகமானவர்களால் புரியப்படும் பாவமீட்சியானது உள்ளத்தோடு தொடர்புபட்டதாகக் காணப்படுவதில்லை. இப்படியிருக்க எப்படி அவர்களது உணவில் விஸ்தீரணம் ஏற்படுவது ?! அத்தகையவர்கள் தாங்கள் புரிந்த பாவங்களை எண்ணி கைசேதப்படாதவர்களாகவும் மீண்டும் மீண்டும் குறித்த பாவத்தையே செய்து வரக்கூடியவர்களாகவும் வியபாரம் போன்ற நடவடிக்கைகளில் ஹலால் ஹராம் ஆகியவற்றைப் பேணாதவர்களாகவும் காணப்படுகின்றார்கள்.
ஒரு மனிதர் இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடத்தில் சமுகந்தந்து தனக்கு ஏற்பட்ட வறுமை குறித்து முறையிட்டார். அதற்கு இமாமவர்கள்: நீர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடிக் கொள்வீராக! எனப் பணித்தார்கள். பிறிதொரு நபர் இமாமவர்களிடத்தில் வந்து தனக்கு ஏற்பட்ட ஏழ்மை குறித்து முறையிட்ட போதும் அவருக்கும் அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புத் தேடுமாறு பணித்தார்கள். பிறகு மூன்றாம் நபர் சமுகமளித்து தனக்கு பிள்ளைகள் இல்லாத குறையை முறையிட்ட போது அவருக்கும் பாவமன்னிப்புத் தேடுமாறு பணித்தார்கள். அடுத்து நாலாமவர் சமுகந் தந்து தனக்கு ஏற்பட்ட வறட்சி குறித்து முறையிட்ட போது அவருக்கும் பாவமன்னிப்புத் தேடுவது கொண்டு உபதேசித்தார்கள்.
மற்றோர் அறிவிப்பில் இமாமவர்களை நோக்கி ரபீஉ என்பவர், உங்களிடத்தில் சில மனிதர்கள் சமுகந்தந்து தங்களது விடயங்கள் தொடர்பாக முறையிட்ட போது நீங்கள் அவர்கள் அனைவருக்கும் ஒரே விடையைக் கூறினீர்களே ?! என ஆச்சரியப்பட்டு வினவ, அல்லாஹ் ஏவியதைத் தவிர வேறு எதுவும் என்னிடத்தில் அவர்களுக்குக் கொடுக்க இல்லை என்று கூறிவிட்டு அந்நூஹ் அத்தியாயத்தின் 10 – 12 வரையான வசனங்களை ஓதிக்காட்டினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
2.    இறையச்சம் – தக்வா -
இறையச்சமானது அல்லாஹ் ஏவியதை எடுத்து நடப்பதிலும் அவன் விலக்கியதைத் தவிர்ந்து நடப்பதிலும் அவனுடைய கோபம் மற்றும் வேதனை ஆகியவற்றைவிட்டும் பாதுகாப்புக் கவசத்தை ஏற்படுத்திக் கொள்வதிலும் தங்கியுள்ளது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகப் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களைக் குறிப்பிடலாம்.
அன்றியும் எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கிறாரோ அவருக்கு ஒவ்வொரு சங்கடத்திலிருந்தும் வெளியேறும் வழியை அவன் ஆக்குவான். மேலும், அவர் எண்ணியிராத வித்தில் அவருக்கு வாழ்வாதரங்களை அவன் வழங்குவான்.
-     அத்தலாக்: 2 – 3
மேலும், அவ்வூர்களை உடையவர்கள் விசுவாசங்கொண்டு அல்லாஹ்வுக்குப் பயந்தும் நடந்திருந்தல் அவர்களுக்காக வானத்திலும் பூமியிலும் உள்ள பாக்கியங்களின் வாசல்களை நாம் திறந்துவிட்டிருப்போம்.
- அல்அஃராப்: 96
3.    மார்க்கத்தை முழுமையாகப் பின்பற்றுதல்
மார்க்கத்தை முழுமையாகப் பின்பற்றுதலும் உணவில் விஸ்தீரணம் ஏற்படுவதற்குக் காரணமாகும். அல்லாஹ் கூறுகின்றான்:
இன்னும் நிச்சயமாக தவ்றாத்தையும் இன்ஜீலையும் அவர்களுடைய இரட்சகனிடமிருந்து அவர்களுக்கு இறக்கிவைக்கப்பட்டதையும் அவர்கள் நிலைநாட்டியிருந்தால் அவர்களுக்கு மேல் வானத்திலிருந்தும் அவர்களுடைய பாதங்களின் கீழ் பூமியில் இருந்தும் புசித்திருப்பார்கள்.
- அல்மாயிதா: 66
4.    உரிய முயற்சிகளை மேற்கொண்டு விட்டு அல்லாஹ்விடத்தில் பொறுப்புச் சாட்டுதல்.
இது குறித்து அல்லாஹுத்தஆலா கூறும் போது:
ஆகவே, உங்களுக்கு வேண்டிய உணவை அல்லாஹ்விடமே தேடுங்கள் என்கிறான்.
 - அல்அன்கபூத்: 17
மேலும் நபிவர்கள் கூறியதாக உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வின் மீது சரியான முறையில் பொறுப்புச் சாட்டக்கூடியவர்களாக இருப்பீராகளென்றால் அதிகாலையில் வெறும் வயிற்றுடன் தமது கூடுகளைவிட்டும் புறப்பட்டுச் செல்கின்ற பறவைகள் மலையில் திரும்பும் போது வயிறு நிரம்பிய நிலையில் திரும்புவதைப் போன்று உங்களுக்கும் அவன் உணவளிப்பான்.
- அஸ்ஸஹீஹுல் முஸ்னத்
இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடத்தில் ஒரு மனிதர் தனது வீட்டில் அல்லது பள்ளிவாசலில் உட்கார்ந்து கொண்டு என்னிடத்தில் உணவு வரும்வரை நான் எந்த ஒரு தொழிலிலும் ஈடுபடமாட்டேன் என்று கூறுகின்றார். அவரின் நிலை என்ன என்று வினவப்பட்டபோது, அந்த மனிதர் அறிவை இழந்தவன் என்று இமாமவர்கள் பதிலளித்துவிட்டு பறவைக்கு அல்லாஹுத்தஆலா உணவளிப்பது தொடர்பான ஹதீஸை முன்வைத்தார்கள்.
எனவே, மனிதன் தனது உடலை வருத்தி பணி புரியும் காலமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உணவை கொடுக்கின்றான் என்ற தத்துவத்தை இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்திநிற்கின்றன. இப்படியாக மனிதன் உணவைத்தேடிப் பெற்றுக் கொள்வதற்கு அல்லாஹ் அனுமதித்த வழிகளில் ஒன்றாக ஜிஹாதையும் குறிப்பிடலாம்.
நபியவர்கள் கூறியதாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள் : என்னுடைய உணவு என்னுடைய ஈட்டியின் நிழலுக்குக் கீழால் ஆக்கித்தரப்பட்டுள்ளது.
 - ஸஹீஹுல் ஜாமிஉ
எனவே, நாம் நல்ல வழிகளில் முயற்சிப்போம் அல்லாஹ் எமக்கு உணவைத் தருவதற்குப் போதுமானவனாக இருக்கின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான்: பூமியிலுள்ள எந்த ஊர்வனவும் அவற்றின் உணவு அல்லாஹ்வின் மீது பொறுப்பாக இருந்தே தவிர இல்லை.
- ஹூது: 6
இன்று மனிதர்களில் பலர் இது விடயத்தில் பிழையான பொறுப்புச் சாட்டுதல் அமைப்பைக் கொண்டுள்ளனர். எத்தனையோ பேர் தனக்கு உணவு கிடைக்கும் விடயத்தில் தனிமனிதர்களிடத்தில் பொறுப்புச்சாட்டக் கூடியவர்களாகவும் மற்றும் பலர் தாம் புரியும் தொழில்களில் உறுதியான நம்பிக்கையைக் கொண்டவர்களாகவும் வேறு சிலர் தொழில் ஏதும் செய்யாமல் சோம்பேறிகளாக இருந்து கொண்டு அல்லாஹ்விடத்தில் உணவை எதிர்பார்க்கக்கூடியவர்களாகவும் காணப்படுகின்றார்கள்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்

No comments: