Oct 2, 2013

முஸ்லிம்கள் சார்பாக மனோ கணேசனிடம் மண்ணிப்புக் கேட்கின்றோம்

அஸ்வர் எம்பியின் அறியாமை
 



கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹிரு தொலைக்காட்சியின் “ப(B)லய” என்ற நிகழ்ச்சியில் மனோ கணேசன், உதய கம்மன்பில, சுமந்திரன், மற்றும் சுதந்திரக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினரான அஸ்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தொலை பேசி வழியாக தம்புள்ளையில் இருந்து தொடர்பு கொண்ட ஒரு சகோதரர் தம்புள்ளையில் பள்ளி தாக்கப்பட்டது, அதன் பின்பு பள்ளியை மீட்டுத் தருவதாக அரசாங்கம் கூறியது. ஆனால் இன்று பள்ளியை முழுமையாக உடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்தில் இருக்கும் நீங்கள் இது தொடர்பாக என்ன செய்கின்றீர்கள்? என்றொரு கேள்வியை முன் வைத்தார்.
கேள்விக்கு பதிலளித்த அஸ்வர் அவர்கள் நாங்கள் (அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள்) தான் ஜனாதிபதியுடன் பேசி அதற்கு தீர்வு பெற்றுத் தந்திருக்கின்றோம். என்று சொன்னார். அப்போது குறுக்கிட்டு பேசிய மனோ கணேசன் அவர்கள் அப்படியானால் தம்புள்ளை பள்ளிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்கின்றீர்களா? என்றொரு கேள்வியை எழுப்பினார்.
குறித்த கேள்விக்கு பதிலளித்த அஸ்வர் அவர்களோ இஸ்லாம் காட்டித் தந்த நாகரீகத்தை மறந்து, மாற்று மத அன்பர்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் கவுரவத்திற்கு இழுக்கை உண்டாக்கும் விதமாக “நீங்கள் உங்கள் கோவிலைப் பற்றிப் பேசுங்கள் பள்ளியைப் பற்றி பேசாதீர்கள் என்று தடுத்தார்.
அப்போது மனோ கணேசன் அவர்களோ “எமது சகோதரர்களான முஸ்லிம்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களுக்கு நாம் குரல் கொடுப்போம்” என்றார்.
மீண்டும் பேசிய அஸ்வர் “அப்படியானால் நீங்கள் சுன்னத் செய்துவிட்டு வாருங்கள்” என்று மார்க்கத்தில் தனக்குள்ள பூஜ்ஜிய நிலையை தெளிவாக உணர்த்தும் விதமாக பதிலளித்தார்.
அரசாங்கத்தின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்காகவும், அதன் மூலம் கிடைக்கக் கூடிய சொற்ப உலக ஆதாயத்திற்காகவும், மார்க்கத்தின் கட்டளைகளைப் பற்றி கொஞ்சமும் தெரியாத அஸ்வர் போன்றவர்கள் இந்த வார்த்தைகள் வன்மையாக கண்டிக்கத் தக்கவையாகும்.
இது முதல் தடவையல்ல!
அஸ்வர் அவர்கள் இப்படி அநாகரீகமாக நடந்தது இதுதான் முதல் தடவையல்ல, இதற்கு முன்பும் ஷக்தி தொலைக் காட்சியின் “மின்னல்” நிகழ்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ரங்கா அவர்களுக்கும் இதே போன்ற அநாகரீகமான வார்த்தையை இவர் சொல்லியதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆளும் கட்சிக்காக அல்லாஹ்வின் கட்டளைகளை மறந்தவர்கள்!
முஸ்லிம்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் மற்ற சக மனிதர்களுடன் எப்படி நடக்க வேண்டும் என்பதை திருமறைக் குர்ஆன் தெளிவாக விபரிக்கின்றது.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்!  (அல்குர்ஆன் 33 – 70)
மேற்கண்ட வசனத்தை இறைவன் “நம்பிக்கை கொண்டோரே!” என்ற வார்த்தையின் மூலம் தான் ஆரம்பிக்கின்றான். ஒருவன் அல்லாஹ்வை இறைவன் என்று நம்பி ஏற்றுக் கொண்டுவிட்டால், முதலில் அவனுக்கு பயப்பட வேண்டும். இரண்டாவது நேர்மையான வார்த்தைகளினால் மற்றவர்களுடன் உறவாட வேண்டும் என இறைவன் பணிக்கின்றான்.
விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; நேர் வழி பெற்றோரையும் அவன் அறிந்தவன். (அல்-குர்ஆன் 16:125 )
மற்ற நம்முடைய சக சகோதரர்களுடன் நாம் நமது உறவுகளை வளர்ப்பதற்கான அறிவுரையை இறைவன் மேற்கண்ட வசனத்தின் மூலம் சுட்டிக் காட்டுகின்றான். ஒருவர் முஸ்லிம் அல்லாத சகோதரர்களுடன் உறவாடும் போது விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் இஸ்லாத்தை பற்றி அவர்களுக்கு எத்தி வைப்பதுடன் அவர்களிடம் விவாதித்தால் அழகிய முறையில் விவாதிக்கும் படியும் இறைவன் கட்டளையிடுகின்றான்.
நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார்.  (அல்குர்ஆன் 41:34)
நம்முடன் பகைமை பாராட்டுபவர்களுடன் கூட எப்படி நடக்க வேண்டும் என்பதை மேற்கண்ட வசனம் தெளிவாக உணர்த்தி நிற்கின்றது.
ஆக ஒரு முஸ்லிம் குர்ஆனுக்கு கட்டுப்பட்டு இறைவனின் வார்த்தைகளுக்கு மரியாதை கொடுப்பவனாக இருக்க வேண்டும் அப்படியிருக்கும் போது சக மனிதர்களுடன் மனித நேயத்துடன் நடக்கக் கூடியவனான அவன் மாறிவிடுவான்.
அஸ்வர் போன்றவர்கள் மேற்கண்ட திருமறை வசனங்களை ஆழமாக பொருளுணர்ந்து படித்து, இஸ்லாத்தின் கட்டளைகளை ஏற்று நடப்பதுடன், மற்றவர்களை மதித்து நடப்பதற்கும் கற்றுக் கொள்ள வேண்டும். ஆளும் கட்சிக்காக அல்லாஹ்வின் வசனங்களை மறந்து வாழ்ந்தால் கண்டிப்பாக மறுமையில் நஷ்டம் மாத்திரம் தான் மீதியாகும் என்பதை மனதில் ஆழமாக பதிந்து கொள்ள வேண்டும்.
உத்தமத் தூதரின் உயரிய பண்பு.
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்கள் தொழும் பள்ளிவாசலில் நின்று கொண்டு சிறுநீர் கழிக்க ஆரம்பித்தார். இதைப் பார்த்த அவர்களது தோழர்கள், “நிறுத்து, நிறுத்து” என்று கூறி, தடுக்க முற்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களைப் பார்த்து, “அவர் சிறுநீர் கழிக்க இடையூறாக இருக்காதீர்கள். அவரை விட்டு விடுங்கள். அவர் சிறுநீர் கழித்து முடிக்கட்டும்” என்று கூறி விட்டு, ஒரு வாளி தண்ணீரைக் கொண்டு வந்து அவர் சிறுநீர் கழித்த இடத்தில் ஊற்றும்படி கட்டளையிட்டார்கள். அந்தக் கிராமவாசி சிறுநீர் கழித்த பின்பு நபியவர்கள் அவரை அழைத்து “பள்ளிவாசல்களில் அசுத்தம் செய்யக் கூடாது. இங்கு இறைவனை நினைக்க வேண்டும். தொழ வேண்டும். குர்ஆன் ஓத வேண்டும்” என்று கூறி உபதேசம் செய்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி), நூல்: முஸ்லிம் (429)
பள்ளிக்குள் சிறு நீர் கழித்தவரையே அவர் கழித்து முடிக்கும் வரை விட்டு விட்டு, அவருக்கு இஸ்லாத்தின் தூய செய்திகளை கற்றுக் கொடுத்து அனுப்பி வைத்தார்கள் என்று மேற்கண்ட செய்தி சொல்கின்றது.
பள்ளியை அசிங்கப்படுத்தியவருடனேயே இறைத் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வளவு பண்பாக நடத்திருக்கும் போது, அஸ்வர் போன்றவர்கள் இவற்றை மறந்து அநாகரிகமாக நடந்து கொண்டதை எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
சமுதாயம் சார்பாக மண்ணிப்புக் கேட்கின்றோம்.
இஸ்லாமிய மார்க்கத்தின் கட்டளைகளைப் பற்றி அறியாத, தெளிவற்ற அஸ்வர் போன்றவர்களின் நடத்தை காரணமாக சகோதரர் மனோ கணேசன் அவர்களுக்கு ஏற்பட்ட சங்கடத்திற்கு முஸ்லிம் சமுதாயம் சார்பாக நாம் பகிரங்க மண்ணிப்புக் கேட்டுக் கொள்கின்றோம்.
அது மட்டுமல்லாது அஸ்வர் போன்றவர்கள் இனியாவது இறைவனுக்கு பயந்து தங்கள் நாவை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று வினயமாக கேட்டுக் கொள்கின்றோம்.
இறுதியாக!
பாராளுமன்றத்தில் தேசிய பட்டியல் உறுப்பினராக இருக்கும் அஸ்வர் அவர்கள் முஸ்லிம்களின் ஏக பிரதிநிதி போல தன்னைக் காட்டிக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். ஆனால் இவருடைய அரசியல் வாழ்வில் அரசாங்கத்திற்கு ஜால்ரா அடித்ததைத் தவிர முஸ்லிம்களுக்காக இவர் எவ்விதமான பிரயோஜனமாக சேவைகளையும் ஆற்றவில்லை என்பதை பொதுமக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
உதாரணத்திற்கு
கிழக்கு மாகாண சபை தேர்தல் நேரத்தில் முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைத்த கதையாக இலங்கையில் எந்தப் பள்ளிவாயலும் உடைக்கப்படவில்லை என்று நா கூசாமல் பொய்யுரைத்தார்.
முஸ்லிம்களுக்கு எதிராக இலங்கையில் இனவாத செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன, பள்ளிகள் தாக்கப்படுகின்றன என்று எதிர் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பாராளுமன்றத்தில் பேசிய நேரத்தில் அவருடைய கருத்துக்கு எதிராக முஸ்லிம்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று பச்சையாக பொய்யுரைத்தார்.
முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக குரல் கொடுப்பதற்கு பதிலாக ஆளும் தரப்பை திருப்திப் படுத்துவதற்காக முஸ்லிம்களின் உரிமைகளையே விட்டுக் கொடுத்து, சமுதாயத்தை காட்டிக் கொடுத்தவர் தான் இந்த அஸ்வர்.
அஸ்வர் போன்றவர்களின் இது போன்ற அநாகரீகமான நடத்தைகளினால் நமது சமுதாயத்திற்காக குரல் கொடுக்கும் மாற்றுமத அன்பர்கள் கூட, இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் பற்றி தவறாக எண்ணவும், விரக்தியடையவும் வாய்ப்பிருக்கின்றது.
சமுதாயத்திற்கு எவ்விதத்திலும் பிரயோஜனமற்ற இவர்களை பொதுமக்கள் சமுதாயத்திலிருந்து ஓரங்கட்டும் நிலை வெகு தொலைவில் இல்லை. இன்ஷா அல்லாஹ்.

நன்றி: sltj.lk

No comments: